கோத்தா கினாபால, நவம்பர் 10:

சபா மாநிலத்தில் சிறு தொழில்முனைவோர்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு (KUSKOP) தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

சபா மாநிலத்தின் 300-க்கும் மேற்பட்ட தெக்குன் (TEKUN) தொழில்முனைவோர்களுடன் ஒன்றிணைந்ததில் பெருமை என இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இத்துறையில் துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இத்தொழில்முனைவோர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்து வருவதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சி, KUSKOP மற்றும் அதன் கீழுள்ள தெக்குன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, மக்களுடன் நேரடியாக சந்தித்து, அடிப்படை நிலை தொழில்முனைவோர்களின் தேவைகளை அறிந்து அவர்களுடன் இணைந்து செயல்பட ஒரு முக்கிய தளமாக அமைந்துள்ளது.

“இது அரசாங்கத்தின் மதானி கொள்கையின் பிரதிபலிப்பாகும். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமமான மற்றும் உள்ளடக்கிய முறையில் தொழில்முனைவு வாய்ப்புகளும் ஆதரவும் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது,” என ரமணன் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் வரை, சபா மாநிலத்தில் மொத்தம் 5,567 தொழில்முனைவோர்களுக்கு RM137 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு கூடுதலாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்த 2026 ஆண்டுக்கான பட்ஜெட்டில், சபா மாநிலத்திற்கு RM6.9 பில்லியன் எனும் வரலாற்றிலேயே உயர்ந்த அளவிலான மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

“சபா மாநிலத்தின் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு தனித்துவமான சமூக-பொருளாதார அணுகுமுறை தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, TEKUN Nasional பல புதிய இலக்குவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது,” என்பதையும் ரமணன் சுட்டிக் காட்டினார்.

இவை அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இணைந்த ஒத்துழைப்பின் விளைவாகும் எனவும், சபா மாநில அரசு மத்திய அரசுடன் ஒரே திசையில் செயல்படுவது மக்களின் நலனுக்கான தெளிவான கொள்கைகளை உருவாக்க உதவும் எனவும் அவர் வலியுறுத்தினார்.