புது டெல்லி:

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் மலேசிய குடிமக்கள் அனைவரும், தங்களது பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே ‘மின் வருகை அட்டை’ (e-Arrival Card) விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயம் என்று புது டெல்லியில் உள்ள மலேசிய தூதரகம் அறிவித்துள்ளது.

மலேசியத் தூதரகம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள இந்த புதிய பயண ஆலோசனையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

சாதாரண மலேசியக் குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவளி வெளிநாட்டு குடியுரிமை (OCI) அட்டை வைத்திருப்பவர்கள் என அனைவரும் இந்த மின் வருகை அட்டைப் பெறுவது அவசியமாகும்.

பயணிகள் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianvisaonline.gov.in/earrival/ என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விமானம் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு முன்பே இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த மின் வருகை அட்டை என்பது தற்போதைய விசா மற்றும் இதர பயண ஆவணங்களுக்கு கூடுதல் தேவையாகும். எனவே, பயணிகள் தங்களது உறுதிப்படுத்தப்பட்ட இ-அரைவல் படிவத்தின் டிஜிட்டல் நகல் அல்லது அச்சுப் பிரதியை (Printout) கையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மலேசியப் பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிடும் முன், இந்திய அதிகாரிகளின் சமீபத்திய விதிமுறைகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு மலேசிய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.