கோலாலம்பூர்:
அசாம் பாக்கியின் பங்கு வைத்திருப்பு தொடர்பான சர்ச்சை குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் கண்டறிதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
The Asian Banker Summit 2026 மாநாட்டின் போது The Edge ஊடகத்திடம் பேசிய அவர், சட்டத்துறை தலைமை அதிகாரி டான் ஸ்ரீ முஹம்மது துசுக்கி மோக்தார் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை நிறைவு செய்து அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும், அரசின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மேற்கொண்டுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு இதுவரை தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிஏபி கட்சியின் தேசியத் தலைவருமான கோபிந்த் சிங் டியோ, இந்த விவகாரம் அமைச்சரவையில் மீண்டும் விவாதிக்கப்படவில்லை என்றும், தற்போதைய நிலை மற்றும் தொடர்ந்த நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் தலைமைச் செயலாளருக்கே தெரிந்திருக்கலாம் என்றும் கூறினார்.
“இறுதியில் மக்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தின் தற்போதைய நிலை என்ன, விசாரணையின் முடிவுகள் என்ன, தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதைக் வெளிப்படையாக விளக்கும் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சர்ச்சை, Bloomberg வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து பெரும் கவனத்தை ஈர்த்தது. அதில், முன்னாள் MACC தலைமை ஆணையர் , Velocity Capital Partner Bhd நிறுவனத்தில் 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாகவும், அதன் மதிப்பு சுமார் RM800,000 எனவும் தெரிவிக்கப்பட்டது. இது அரசுப் பணியாளர்களுக்கான RM100,000 பங்கு வைத்திருப்பு வரம்பை மீறுவதாக கூறப்பட்டது.
அசாம் பாக்கி, அந்த பங்குகளை வாங்கியதை ஒப்புக்கொண்டிருந்தாலும், பின்னர் அவற்றை விற்றுவிட்டதாகவும், தாம் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையராக பணியாற்றிய அசாம் பாக்கி, கட்டாய ஓய்வு வயதை கடந்த பின்னரும் மூன்று முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மே 12 அன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம், மே 13 முதல் புதிய தலைமை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

