Homeகுற்றவியல்போதைப்பொருள் உட்கொண்டதாக லான்ஸ் கார்பரலுக்கு எதிராக குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்டதாக லான்ஸ் கார்பரலுக்கு எதிராக குற்றச்சாட்டு

ஈப்போ:

போதைப்பொருளை உடலில் செலுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட 26 வயதுடைய காவல்துறை லான்ஸ் கார்பரல் ஒருவர் இன்று ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டபட்டார்.

முகமட் ஐசாத் ஸம்லி, ஜொகூர் மாநிலம் செகாமாட் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அவர், மஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அதிகாலை 5.04 மணியளவில், கிந்தா மாவட்டம் தாமான் ஈப்போ, ஜாலான் கானிங் எஸ்டேட்டில் அமைந்துள்ள கிராண்ட் ஓசி எஸ்.டி.என். பி.எச்.டி. வளாகத்தின் விஐபி அறை 1-ல், கெட்டமின் (Ketamine) மற்றும் எம்.டி.எம்.ஏ. (MDMA) வகை ஆபத்தான போதைப்பொருட்களை உடலில் செலுத்திக் கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு, 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 15(1)(a)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக ரிம5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அதேவேளை, சட்டத்தின் பிரிவு 38B(1)-இன் கீழ், தண்டனையை அனுபவித்த பின்னர் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை கண்காணிப்பின் கீழ் வைக்கவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் முகம்மது ஸுல்கர்னைன் வான் அஸ்மிரா, ரிம4,000 ஜாமீன் தொகையை முன்மொழிந்தார்.

எனினும், தேசிய சட்ட உதவி அறக்கட்டளை (YBGK) சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நூர் நட்ராஹ் பத்ருடின், தனது வாடிக்கையாளர் திருமணமாகாதவர் என்றும், வயது முதிர்ந்த தந்தையைப் பராமரித்து வருவதால் குறைந்தபட்ச ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, ரிம.2,000 ஜாமீனில் ஒருவரை உத்தரவாதமாக நிறுத்தி விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு மற்றும் வழக்கறிஞர் நியமனம் தொடர்பான அடுத்தக் குறிப்புக்காக வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதியை நிர்ணயித்தது.

spot_img

latest articles

explore more