கிள்ளான்:
பண்டார் உத்தாமாவில் 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம், குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே காணப்படும் தீவிரமான மனநலப் பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அவர் கூறினார்.
உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் மனநல மருத்துவ ஆதாரங்களின்படி, சம்பந்தப்பட்ட இளைஞரிடம் பல ஆண்டுகளாக நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்கள் காணப்பட்டதாகவும், தாயார் மற்றும் இரு வகுப்புத் தோழர்களிடம் ஆக்கிரமிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுமார் ஒன்பது வயதிலிருந்தே சில அறிகுறிகள் இருந்தபோதிலும், அவை தீவிரமான மனநலப் பிரச்சினைகளின் அறிகுறிகளாக அடையாளம் காணப்படவில்லை எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாணவர்களிடம் திடீர் நடத்தை மாற்றம், சமூகத்திலிருந்து விலகுதல், மாயத் தோற்றங்கள், அளவுக்கு மீறிய அச்சம் அல்லது தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை வெறும் ஒழுக்கப் பிரச்சினையாகக் கருதாமல், தொழில்முறை மனநல மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் பள்ளிகளில் ஆரம்பகட்ட மனநலத் தலையீட்டு முறைகளை வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட கணபதிராவ், ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு உரிய பயிற்சி, விரைவான நிபுணர் பரிந்துரை நடைமுறை, பெற்றோருக்கான ஆதரவு மற்றும் பள்ளி–குடும்பம்–சுகாதார சேவைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டும் என்றார்.
மனநலப் பிரச்சினை கொண்ட அனைவரையும் ஆபத்தானவர்கள் எனக் கருதக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அதேவேளை தீவிரமான எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்கவும் கூடாது என்றார்.
“மற்றொரு குழந்தை பலியாகும் வரை அல்லது மற்றொரு குடும்பம் தனது குழந்தையை இழக்கும் வரை காத்திருக்காமல், பள்ளிகளில் ஆரம்பகட்ட அடையாளம் காணுதல், சிகிச்சை மற்றும் மாணவர் பாதுகாப்பு முறைகளை வலுப்படுத்த வேண்டும்” என கணபதிராவ் வலியுறுத்தினார்.


