Homeஅரசியல்அனைத்து மலேசியர்களுக்குமான தலைவராகவே இருக்க விரும்புகிறேன்: பிரதமர் அன்வார்

அனைத்து மலேசியர்களுக்குமான தலைவராகவே இருக்க விரும்புகிறேன்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மலேசியர்களையும் நேசிக்கும் தலைவராகவே தான் தொடர்ந்து இருக்க விரும்புவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலாய் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை முன்னெடுத்தால் மட்டுமே அரசியல் ரீதியாகத் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும் எனச் சில தரப்பினர் கூறி வரும் நிலையில், அதனை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அன்வார், நீங்கள் அரசியல் ரீதியாகத் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால், மலாய் மக்களின் நலன்களையும் மேலாதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இல்லையெனில், உங்களால் அரசியலில் நீடிக்க முடியாது என்கிறார்கள்.

“ஆனால், இந்த நாட்டை நேசிக்கும் ஒரு மலேசியத் தலைவராகவே நான் இருக்க விரும்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற தேசிய தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் அடிப்படைக் கொள்கைகளையும் கூட்டரசு அரசியலமைப்பையும் நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அன்வார், மலாய் மொழியின் நிலை, இஸ்லாம், மலாய் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.

அதேவேளையில், அனைத்து மலேசியர்களுக்கும் நீதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தினால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் பேண முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களின் நல்வாழ்வையும் மேம்படுத்தும் வகையில் நாட்டின் செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், வறுமை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே உரிய பிரச்சினையல்ல என்றார்.

மலாய், சீன, இந்திய, இபான் மற்றும் கடசான் சமூகங்களைச் சேர்ந்த பலர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஒவ்வொரு சமூகத்திலும் வறுமை நிலவுவதாகவும், அதற்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப சில தரப்பினர் இன விவகாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக அன்வார் குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக, தங்களது சமூகத்தின் எதிர்காலம் குறித்து உரக்கப் பேசும் சிலர், நாட்டின் செல்வந்தர்களில் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அவர்களின் போராட்டம் உண்மையில் தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் மேலும் செல்வந்தர்களாக்கிக் கொள்வதற்கானதாகவே உள்ளது,” என்றார்.

இதற்கிடையில், ஒளியின் திருநாளான தீபாவளி இருளை அகற்றி ஒளி வெற்றி பெறுவதைக் குறிக்கும் பண்டிகை என்று குறிப்பிட்ட அன்வார், சமூகத்தில் நீதி, நேர்மை மற்றும் உயரிய நற்பண்புகளை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் இந்நாள் நினைவூட்டுவதாகத் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தைப் பாதிக்கும் கல்வி, தமிழ்ப்பள்ளிகள், இந்து ஆலயங்கள், வணிகர்கள் மற்றும் நகர்ப்புறங்கள், தோட்டப்புறங்களில் நிலவும் சமூகத்தின் வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்பட வேண்டியிருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அனைத்து இன மக்களுக்கும் உதவும் வகையில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், ஜனவரி மாதத்தில் பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் 200 ரிங்கிட் உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

இந்த உதவித்தொகை இனம் அல்லது மாவட்ட வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more