கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) முனையம் 2-இல் பணியாற்றும் இந்தியப் பெண் அதிகாரி ஒருவர், தனது மேலதிகாரி மீதான அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடர்பாகக் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பாராட்டுக்குரியது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி ஷண்முகம் மூக்கன் தெரிவித்துள்ளார்.
கீழ்நிலை அதிகாரியாக இருந்தபோதிலும், தனது பணிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்படக்கூடிய சவால்களைப் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் புகார் அளித்திருப்பது, அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைக்கும் நேர்மையான நிர்வாகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு என அவர் குறிப்பிட்டார்.
மேலும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை AKPS தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஷுஹைலி முகமது ஸைன் வெளிப்படுத்தியிருப்பதையும் அவர் பாராட்டினார்.
“பதவி என்பது தவறுகளுக்குக் கேடயமல்ல; அதிகாரம் என்பது தண்டனையிலிருந்து தப்பிக்கும் அனுமதிச் சீட்டுமல்ல. உண்மைக்காகக் குரல் கொடுப்பவர்களின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டும்” என ஷண்முகம் மூக்கன் வலியுறுத்தினார்.
அந்தப் பெண் அதிகாரியின் துணிச்சல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.


