மூனிக், ஆக.2 –
ஜெர்மனியில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் லிவர்புல் 3 – 0 என்ற கோல்களில் பாயேர்ன் மூனிக்கை வீழ்த்தியது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் புதிய பருவத்துக்கு தயாராகி வரும் லிவர்புல் பல்வேறு நட்புமுறை ஆட்டங்களில் பங்கேற்று வருகிறது.
அதில் ஒரு பகுதியாக ஜெர்மனியில் ஆவ்டி கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்புல் பங்கேற்றது. கடந்த பருவத்தின் இறுதியில் காயம் அடைந்திருந்த சாடியோ மானே மீண்டும் லிவர்புல் கிளப்பில் களமிறங்கினார்.
லிவர்புல் அணியில் புதிய வரவான முஹமட் சாலாவுடன் இணைந்து சாடியோ மானே அதிரடிப் படைத்தார். ஆட்டம் தொடங்கிய ஏழாவது நிமிடத்தில் ரோபேர்ட் பிர்மின்ஹோ தட்டிக் கொடுத்தப் பந்தை மானே கோலாக்கினார்.
34 ஆவது நிமிடத்தில் முஹமட் சாலா கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். 84 ஆவது நிமிடத்தில் லிவர்புல் அணியின் மூன்றாவது கோலை டேனியல் ஸ்டாரிட்ஜ் போட்டார். புதிய பருவத்தை முன்னிட்டு நடைபெற்ற நட்புமுறை ஆட்டங்களில் லிவர்புல் தோல்வி காணவில்லை என்பது குறிப்பிடதக்கது.


