கோலாலம்பூர், அக்.27 –
14 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை இழந்துள்ள வேளையில், இந்தியர்கள் மத்தியில் எதிர்கட்சியாக வீற்றிருக்கும் ம.இ.கா. மீண்டும் எழுச்சிப் பெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அதன் தேசிய தலைவர் டான் ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ம.இ.கா. தேர்தலின் மூலம் தேர்வுப் பெற்றுள்ள கட்சியின் புதிய உயர் மட்ட தலைவர்கள் நிச்சயம் கட்சியை வலுப்படுத்தும் தமது உன்னத நோக்கத்துக்கு அனைவரும் தோள் கொடுப்பார்கள் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ம.இ.கா-வின் 72 ஆவது பொது பேரவையைத் தொடக்கி வைத்து கொள்கை உரையாற்றும்போது டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் ம.இ.கா-வின் 10 ஆவது தலைவராக தேர்தெடுக்கப்பட்ட தாம் , ம.இ.காவின் வரலாற்றில் முதல் எதிர்கட்சி தலைவராக விளங்குவதாகவும் விக்னேஸ்வரன் நகைச்சுவையுடன் பேராளர்களிடம் குறுப்பிட்டார்.

ம.இ.கா இன்று எதிர்கட்சியாக இருந்தாலும் அதன் உறுப்பினர்களின் நலனில் தொடர்ந்து கவனம் செலுத்தும். இது நாள் வரை ம.இ.கா. உறுப்பினர்கள், இந்திய சமுதாயத்தின் நலனுக்காக கடுமையாக பாடுபட்டனர்.எனினும் ஊருக்கு உபதேசம் செய்த அவர்கள் சொந்த வீட்டை கவனிக்க மறந்து விட்டனர். எனவே இனி வரும் மூன்று ஆண்டுகளில் ம.இ.கா.-வை வலுப்படுத்தும் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உறுப்பினர்களின் நலனில் கட்சி தலைமைத்துவம் அதிகம் கவனம் செலுத்தும்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தைப் பிரதிநித்து நால்வர் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றனர். இந்தியர்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அவர்கள் கவனம் செலுத்தும் வேளையில் ம.இ.கா. உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் அவர்களின் நலனில் அக்கறைக் கொள்வதிலும் ம.இ.கா. தலைமைத்துவம் அதிகம் கவனம் செலுத்தும் என விக்னேஸ்வரன் கூறினார்.

இதுநாள் வரை, ம.இ.கா-வில் உள்ள பெரும்பாலான தொகுதி மற்றும் கிளைத் தலைவர்கள் கட்சி உறுப்பினர்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொண்டதில்லை. இந்த நிலை மாற வேண்டும். இனி கிளைத் தலைவர்களும், தொகுதித் தலைவர்களும் தங்களின் கிளைகளில் உள்ள உறுப்பினர்களின் சுக துக்கங்களில் மறாவமல் பங்கேற்க வேண்டும் என விக்னேஸ்வரன் தமது கொள்கை உரையில் கேட்டு கொண்டார்.
ம.இ.கா இன்று எதிர்கட்சியாக இருந்தாலும் தமது போராட்ட குணத்தை இழந்து விடவில்லை. 1946 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த கட்சி இதுநாள் வரை இந்திய சமுதாயத்திற்காக கடுமையாக உழைத்தது. அதனை யாரும் மறுக்க முடியாது. ம.இ.கா. ஒன்றுமே செய்யவில்லை என கூறுபவர்கள் இந்த கட்சி என்ன செய்தது என்று தெரியும். ஆனால் தங்களின் சுயநலத்துக்காக ம.இ.கா -வை குறைக் கூறும் தரப்பினர்கள் பற்றி கவலைப் படப் போவதில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ம.இ.கா கட்சியில் சீரமைப்பை மேற்கொள்ளப் போவதாக விக்னேஸ்வரன் பேராளர்கள் மத்தியில் உறுதி அளித்தார். அண்மையில் நடந்த மாநில தேர்தல்கள் மற்றும் உயர் மட்ட பதவிகளுக்கான தேர்தலில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளார்கள் வாக்களித்திருப்பது இந்த கட்சி இன்னமும் உயிர்ப்புடன் உள்ள ஒரு கட்சி என்பதைக் காட்டுவதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கட்சிக்காக உண்மையாக உழைக்கத் தயாராக இருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல தாம் தயாராக இருப்பதாக அவர் சொன்னார். ம.இ.கா-வில் ஆறு லட்சம், ஐந்து லட்சம் என உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூறிக் கொண்டிருக்காமல், வெறும் இரண்டு லட்சம் உறுப்பினர்கள் இருந்தால் கூட போதும். கட்சியை செம்மையாக வழி நடத்த முடியும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
15 ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. போட்டியிட விருக்கும் தொகுதிகள், அதில் போட்டியிட விருக்கும் வேட்பாளர்கள் முன் கூட்டியே அறிவிக்கப்படுவார்கள் என்றும் விக்னேஸ்வரன் கூறினார். இதன் வழி இழந்தத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கு கடுமையாக உழைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் இன்று அரசியல் நிச்சயமற்ற ஒரு சூழலில் இருப்பதாக விக்னேஸ்வரன் கூறினார். துன் மகாதீர் இல்லையென்றால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்க முடியாது என்பது தம்மால் உறுதியாக கூற முடியும் என விக்னேஸ்வரன் கூறினார். அதேவேளையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்பதும் உறுதியாக தெரியவில்லை. எனவே, ம.இ.கா நாட்டின் அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து காலத்துக்கு ஏற்ப தனது அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பாஸ் கட்சியுடன் ம.இ.கா. மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பு குறித்தும் விக்னேஸ்வரன் விளக்கம் அளித்தார். ஶ்ரீ செத்தியா இடைத் தேர்தலுக்கு முன்பாக பாஸ் கட்சி விடுத்த அழைப்பை முன்னிட்டு தாமும் இதர சில உறுப்பினர்களும் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹடி அவாங்கை சந்தித்தாக அவர் சொன்னார். அதில் ம.இ.கா. நிலைப்பாடு குறித்து தெளிவாக விளக்கப்பட்டதாக விக்னேஸ்வரன் கூறினார்.
ம.இ.கா-வில் தற்போது ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் நிரந்தர வைப்புத் தொகையாக உள்ளது. கட்சிக்கான கடன்கள் அடுத்தாண்டில் கட்டி முடிக்கப்படும் என விக்னேஸ்வரன் கூறினார். ம.இ.கா. தலைமையகத்துக்கு அருகில் உள்ள நிலத்தை தனியார் நிறுவனத்திடம் இருந்து மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலத்தில் புதிய தலைமையகத்தைக் கட்ட கட்சி தலைமைத்துவம் திட்டமிட்டுள்ளது. இந்த கட்டிடத்தை கட்சி உறுப்பினர்களிடம் இருந்து நிதி வசூலிக்காமல் கட்டி முடிப்போம் என விக்னேஸ்வரன் கூறினார்.
இன்றைய பொது பேரவையில் ம.இ.கா-வின் வசம் உள்ள எம்.ஐ.இ.டி நிதி மற்றும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் குறித்தும் பேராளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் ம.இ.கா. சொத்துகள் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எனவே இது குறித்து ம.இ.கா. உறுப்பினர்கள் அச்சப் படத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
ம.இ.கா. பொது பேரவையில் கொள்கை உரை என்ற பெயரில் எழுதிக் கொடுக்கப்பட்ட உரையை வாசிக்காமல் தமது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி பேராளர்கள் மனதில் விக்னேஸ்வரன் இடம் பிடித்தார். அவ்வபோது சில விசயங்களை நகைச்சுவையாகவும் குறிப்பிட்டு பேராளர்களை சிரிக்க வைத்தார்.
இன்றைய பொது பேரவையில் சமர்பிக்கப்பட்ட கணக்கறிக்கைக் குறித்து பேராளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் விக்னேஸ்வரன் நிதானமாக பதில் அளித்தார். கடந்த கால பொது பேரவைகளில், இதுபோன்று வெளிப்படையாக பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடதக்கது.


