கோலாலம்பூர், ஜூன் 2-
உயரிய விருதுகள், பட்டங்கள், கூட்டரசு பதக்கங்கள் முதலானவை, விலை கொடுத்து வாங்கவோ அல்லது குறிப்பிட்டத் தரப்பினரை கவர்ந்து பெறுவதோ அல்ல.
மாறாக, உண்மையிலேயே நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் சேவையாற்றிய தகுதி வாய்ந்தவர்களுக்கே, அவை வழங்கப்பட வேண்டுமென, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
குறிப்பாக, அரசாங்கம் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய விதிமுறைகளை கோடிட்டிருந்தாலும், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் தாம் கட்டாயம் மறு மதிப்பீடு செய்யப்போவதாக, பேரரசர் திட்டவட்டமாக கூறினார்.
தம்மை பொறுத்தவரையில், அரசாங்கத்திற்கு நீண்டக்காலம் சேவையாற்றியவர்களும் நாட்டின் பெயரை மணக்கச் செய்தவர்களும் மட்டுமே அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும், நிறையப் பேர், அந்த விதிமுறையை பூர்த்தி செய்வதில்லை. விருதைப் பெறும் முயற்சியில், சிலர் அவர்களது செல்வாக்கைப் பயன்படுத்த முயற்சித்த போதிலும், தாம் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை.
டத்தோ, தான் ஸ்ரீ பட்டங்கள் விற்பனைக்கு அல்ல. அதிகப் பணத்தைக் கொண்டுள்ளவர்கள், உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு உதவுவது உள்ளிட்ட சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் பேரரசர் அறிவுறுத்தினார்.
தமது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற உயரிய விருதுகள், பட்டங்கள், கூட்டரசு பதக்கங்கள் முதலானவை வழங்கும் நிகழ்ச்சியில், பேரரசர் பேசினார்.


