சுங்கை பூலோ, நவம்பர் 14:
தொடர்ந்து பதினாறு நாட்கள்… வீட்டைச் சுற்றி பெருக்கெடுத்த வெள்ள நீர், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சகதி, அன்றாடம் கஷ்டப்பட்டு சேர்த்தெடுத்தப் பொருட்களெல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, செய்வதறியாது விழி பிதுங்கி நின்றார்கள் சுங்கை பூலோ மக்கள்.
அந்தச் சோகத்தின் வடு இன்னும் உலராத வேளையில், தங்களது கண்ணீரைத் துடைக்க யாராவது வருவார்களா என்று ஏங்கித் தவித்த அந்த ஏழை எளிய மக்களின் துயரைத் துடைத்து, அவர்களின் தோளோடு தோளாய் நின்று காப்பாற்றக் களம் இறங்கினார் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்.
சுங்கை பூலோ, ஜாலான் பாயா ஜாராஸ் தெங்காவில் உள்ள அஸ்தானா ஏரா மேவா மண்டபத்தில் நடைபெற்ற ‘சந்துனி மடானி காசி’ திட்டத்தின் தொடக்க விழா, வெறும் ஒரு நிவாரண வழங்கும் நிகழ்வாக மட்டும் நடக்கவில்லை; அது மக்களின் துயரத்தைத் துடைத்து, அவர்களின் முகங்களில் நம்பிக்கையின் ஒளியை மீட்டெடுத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது.
மனிதவள அமைச்சகமும், மனிதவள மேம்பாட்டுக் கழகமும் (எச்.ஆர்.டி. கார்ப்) இணைந்து செய்த இந்தப் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) உதவியின் மூலம், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1,500 குடும்பங்களின் இல்லங்கள் மீண்டும் ஒளிரத் தொடங்கியுள்ளன.
சுமார் 10 லட்சம் ரிங்கிட் செலவில், கம்போங் மெலாயு சுபாங், கம்போங் குபு காஜா, கம்போங் பாயா ஜாராஸ் ஹிலிர், கம்போங் மெர்பாவ் செம்பாக், கம்போங் சுங்கை பெலோங், கம்போங் பாயா ஜாராஸ் தெங்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் துயர் துடைக்கப்பட்டது.
வெள்ளத்தில் முற்றிலும் கருகிப் போன சமையலறைகளை மீட்டெடுக்கும் விதமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களுடன் 625 ரிங்கிட் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் நேர்த்தியாக வழங்கப்பட்டன.
மக்களுடன் மக்களாக நின்று, அவர்களின் கரங்களைப் பிடித்து ஆறுதல் சொல்லி, ஒட்டுமொத்த சுங்கை பூலோ மக்களின் உற்ற தோழனாகத் திகழ்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் ரமணன், விழாவில் உணர்வுபூர்வமாகப் பேசினார்:
“16 நாட்கள் தொடர்ந்து தண்ணீரில் தவித்துவிட்டு, மக்கள் இழந்த பேரிழப்போடு ஒப்பிடும்போது நாங்கள் வழங்கும் இந்த உதவி ரொம்பச் சிறியதுதான். ஆனாலும், அவர்கள் மீண்டும் வாழ்க்கையைத் தைரியமாகத் தொடங்க இந்தச் சிறிய அரவணைப்பு ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும் என்று நினைக்கிறோம். இந்த உதவிகள் அனைத்தும் உண்மையான பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதை எனது அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக உறுதி செய்வார்கள்” என்றார் அவர்.
அத்துடன் எச்.ஆர்.டி. கார்ப் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமது ஷமிர் அப்துல் அசிஸும் உடனிருந்து உதவிகளை வழிநடத்தினார்.
மக்களின் பொருளாதாரச் சுமையை இறக்கி வைக்க அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளையும் அரவணைப்பையும் தந்துள்ளார் அமைச்சர் ரமணன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூடுதலாக 2,500 ரிங்கிட் சிறப்பு ரொக்க உதவியை அறிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், துயரக் காலத்தில் தற்காலிக நிவாரண மையங்களில் (பி.பி.எஸ்) தஞ்சம் புகுந்து பதிவு செய்துகொண்ட மக்களுக்கு மாநில அரசு தரப்பில் 500 ரிங்கிட் உடனடி உதவியும் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
“இனி சுங்கை பூலோவில் இந்தத் துயரம் மீண்டும் தலைதூக்கக் கூடாது!” என்று நெஞ்சில் உறுதியோடு நின்ற அமைச்சர் ரமணன், இப்பகுதியில் அடிக்கடி துயரத்தைக் கொடுக்கும் திடீர் வெள்ளப்பெருக்கைத் தடுத்து நிறுத்த, 1 கோடியே 20 லட்சம் ரிங்கிட் செலவில் பிரம்மாண்டமான தற்காலிகத் தண்ணீர் தேக்கக் குளம் அமைக்கப்படவுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டார்.
துயரமும் கண்ணீருமாய் முடங்கிப் போயிருந்த ஒரு சமூகத்திற்கு, தன் சொந்த மக்களைப் போல நின்று காவல் அரணாகத் திகழ்ந்த அமைச்சர் ரமணன், சுங்கை பூலோ மக்களின் உண்மையான ‘ஹீரோ’ என்பதை இந்தத் திட்டம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது!


