Homeமலேசியாஆர்.டி.எம்.மில் வெளிநாட்டு கால்பந்து லீக் ஒளிபரப்பா? கைரி விளக்கம்

ஆர்.டி.எம்.மில் வெளிநாட்டு கால்பந்து லீக் ஒளிபரப்பா? கைரி விளக்கம்

ஜெலுபு, ஜன.8-
நம்பிக்கைக் கூட்டணி வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டு கால்பந்து லீக் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை மலேசிய ரேடியோ வானொலி (ஆர்.டி.எம்.) நிலையத்திற்கு வழங்கப்படும் என அக்கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளதை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் சாடினார்.

இளைஞர்களின் மனதைக் கவருவதற்காக நம்பிக்கைக் கூட்டணி இந்த புதிய வாக்குறுதியை அளித்திருப்பதாக அவர் கூறினார்.

இங்கிலாந்து பிரிமியர் லீக் (இ.பி.எல்.) மற்றும் ஸ்பெயினின் லா லீகா ஆகியவை நேரடி ஒளிபரப்பாக ஆர்.டி.எம்.மில் ஒளிபரப்பப்படும் என அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். தொலைக்காட்சி நிலையத்தில் பணியாற்றிவரும் எனது நண்பரிடம் அவ்விரு லீக் ஆட்டங்களை நேரடியாக ஒளிபரப்பவும் அதற்கான ஒளிபரப்பு உரிமையையும் பெறுவதற்கு எவ்வளவு செலவாகும் என விசாரித்தேன். அவர் குறைந்தது ஓர் ஆண்டுக்கு 10 கோடிக்கும் மேல் செலவாகும் என கூறினார்.

இவ்விரு லீக் ஆட்டங்களை ஒளிபரப்பும் உரிமை ஆர்.டி.எம்.மிற்கு வழங்கப்பட்டால் யார் அதற்கான கட்டணத்தைச் செலுத்துவது. இறுதியில் மக்கள் பணத்தைத்தான் பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு, ஒளிபரப்பிற்கு 20 கோடி வெள்ளி தொகையை செலுத்த வேண்டுமென வைத்துக்கொள்வோம். அவ்வளவு தொகையை செலவு செய்ய முடியுமா? என ஜெலுபு நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணியின் தேர்தல் எந்திரத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது கைரி குறிப்பிட்டார்.

நம்பிக்கை கூட்டணியின் இளைஞர் பிரிவு வழங்கியிருக்கும் இந்த வாக்குறுதி அறிவுக்கு பொருந்தாதது. பொறுப்பற்றது. அதற்கு பதிலாக மக்களின் நன்மைக்காக நாடு தழுவிய நிலையில் விளையாட்டு அரங்குகளை அமைக்கலாம் என தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவருமான கைரி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெலுபுவில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளதை கைரி அறிவித்தார். இந்த அரங்கம் விரைவில் கட்டி முடிப்பதற்கான குத்தகையை வழங்குவோம். குறைந்தது 18 மாதத்தில் 80 லட்சம் வெள்ளியில் கட்டி முடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more