கோலாலம்பூர், ஜன.8-
தனது சொந்த தவறுகளை மறைப்பதற்காக வேண்டுமென்றே துன் டாக்டர் மகாதீரின் குறைகளை அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுடின் தேடக்கூடாது என பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமரான துன் மகாதீர் அரசாங்கத்தின் நெளிவு சுளிவுகள் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அதிகார பரிமாற்றம் ஒன்றும் புதிய விவகாரம் அல்ல. இந்த சூழலில் அவர் சரியான தேர்வாக இருப்பதாக சைட் சாடிக் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆட்சியின் கீழ் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்களது பேச்சுரிமைப் பறிக்கப்படுவதை நாம் மறக்கக்கூடாது. அவர்கள் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களிலிருந்து தூக்கியெறியப்படுவார்கள் என மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றது. மக்களின் வாயை மூடுவதற்காக பல்வேறு வகையான அணுகுமுறைகளை அவர்கள் கையாள்வதாக தனது அறிக்கையின் வாயிலாக சைட் சாடிக் குறிப்பிட்டார்.
பெல்டா நில உரிமை விவகாரம், கடந்த 2016ஆம் ஆண்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் 10 கோடி வெள்ளி நிதிமுறைகேடு நிகழ்ந்துள்ளதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட விசாரணை முதலானவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். மலேசியாவின் 7ஆவது பிரதமர் வேட்பாளராக துன் மகாதீரை நம்பிக்கைக் கூட்டணி அறிவித்துள்ளதால் அதன் பயம் காரணமாக கைரி இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடும் என தாம் நம்புவதாக சைட் சாடிக் சொன்னார்.
துன் மகாதீர் தொடர்பான அறிவிப்பால் வரும் பொதுத்தேர்தலில் மலாய்க்காரர்களின் ஆதரவு, அம்னோவின் வலுவான கோட்டைகள் நம்பிக்கைக் கூட்டணியின் பக்கம் சாயும் என்பதால் அம்னோவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பது கைரிக்கு தெரியும் அவர் கூறினார். முன்னராக நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமராக துன் மகாதீர் பொறுப்பேற்றால் நாட்டில் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போகும் என கைரி கூறியது தொடர்பில் வினவப்பட்ட போது சைட் சாடிக் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விவசாய நாட்டிலிருந்து தொழில்துறை நாடாக மலேசியாவை வெற்றி அடைய செய்ததற்கான பதிவை மகாதீர் கொண்டிருக்கிறார். மெனாரா கே.எல், பெட்ரோனாஸ் கட்டடம் முதலான மாபெரும் திட்டங்களை வெற்றிக்கரமாக நடத்தியுள்ளார். அவரது காலத்தில் ஆசிய பொருளாதாரத்தின் புலி மலேசியாவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு பொருளாதார மந்த நிலையை அவர் திறன்பட கையாண்டதை பேங்க் நெகாரா பாராட்டியுள்ளது. அவரது நடவடிக்கை உலகத் தலைவர்களுக்கும் பொருளாதார உறுப்பினர்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதாக சைட் சாடிக் கூறினார்.


