புத்ராஜெயா, ஜன.11-
குடியுரிமை இல்லாத மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல கல்வி அமைச்சு அனுமதித்திருக்கும் உத்தரவை இந்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டார்.
இவ்விவகாரத்தில் தங்கள் பிள்ளைகள் கல்வி பயில்வதற்கு பள்ளிகள் தடை செய்தால் மாநிலக் கல்வி இலாகா அல்லது கல்வி அமைச்சைக் குடியுரிமையற்ற பெற்றோர்கள் நாட வேண்டுமென அவர் கூறினார்.
இவ்விவகாரத்தில் கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளதால் அதை சம்பந்தப்பட்ட பள்ளிகள் பின்பற்ற வேண்டும். இதில் பிறப்புப் பத்திரம், பிறப்புப் பதிவு ஆகியவற்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது தேசியப் பதிவுத் துறை அதிகாரத்தின் கீழ்தான் உள்ளது.
இருந்த போதிலும் கல்வி ரீதியில் பார்க்கையில் இவ்வாறு ஆவணங்களின்றி இருப்பவர்களையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று உள்துறை அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஸாஹிட் குறிப்பிட்டார்.
முன்னதாக குடியுரிமையற்ற சிறார்களின் விண்ணப்பங்கள் இன்னும் செயலாக்கத்தில் இருந்த போதிலும் அவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் கடந்த வாரம் சனிக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


