Homeஇந்தியா/ ஈழம்`வைகோவுக்கு இனி தூக்கமே கிடையாது' - கலாய்த்த ஓ.பி.எஸ்!

`வைகோவுக்கு இனி தூக்கமே கிடையாது’ – கலாய்த்த ஓ.பி.எஸ்!

சென்னை, அக்.1 –

எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வர் ஆகப்போவதில்லை, வைகோவும் தூங்க முடியாது எனத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேசியுள்ளார். சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்டாலின் மற்றும் தி.மு.கவை கடுமையாக விமர்சித்தார்.

விழாவில் பேசிய அவர், “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலினுக்கு தம்பிதுரை மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவரோ ஏதேதோ காரணங்களைச் சொல்லி விழாவில் பங்கேற்கவில்லை என அறிக்கை விட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தி.மு.கவைக் கடுமையாக விமர்சிப்பதாகக் கூறி விழாவில் பங்கேற்க அவர் மறுத்துள்ளார்.

தமிழக மக்களுக்குத் தி.மு.க செய்த துரோகங்களைச் சொல்லித்தானே ஆக வேண்டும். இலங்கைப் போர் குறித்து ராஜ்பக்சே சொன்னதைத்தான் நாங்கள் மேடைகளில் பேசினோம். இதில் என்ன தவறு இருக்கிறது. இலங்கைப் படுகொலை நடக்கும்போதே ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அதை எதிர்க்கவில்லை. கபட நாடகம் மட்டுமே ஆடியது.

இதனால் பல லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கைப் படுகொலையை எதிர்த்த தலைவர்கள் எல்லாம் இப்போது ராஜபக்சே சொன்னது குறித்து பேசாமல் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்கள். ஏனென்றால் தி.மு.கவுடன் அவர்கள் கூட்டணி சேரப்போகிறார்களாம்.

அன்றைக்கு `நான் உயிரோடு இருக்கும் வரை ஸ்டாலினை முதல்வராக்க விட மாட்டேன்’ என சொன்னவர்தான் வைகோ. அதே வைகோ இப்போதோ,`ஸ்டாலினை முதல்வர் ஆக்காமல் தூங்க மாட்டேன்’ என்கிறார். எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வர் ஆகப்போவதில்லை. அப்படியானால் வைகோவுக்கு தூக்கம் போச்சு. இவர் ஒருபக்கம் என்றால் டி.டி.வி. தினகரன் மறுபக்கம். டி.டி.வி தினகரனின் 20 ரூபாய் நோட்டு செல்லாமல் போய்விட்டது. ஒரு குண்டூசியை வைத்துக்கொண்டு மலையை குடையப் பார்க்கிறார் தினகரன்’ என விமர்சித்தார்.

நன்றி : ஆனந்த விகடன்

spot_img

latest articles

explore more