Homeஇந்தியா/ ஈழம்சென்னைக்கு புதிய பன்னாட்டு விமான நிலையம்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னைக்கு புதிய பன்னாட்டு விமான நிலையம்’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை, அக்.1 –

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதேநேரம் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் அவர் விமர்சித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்ததோ அப்படிதான் தற்போதும் உள்ளது. தமிழகத்தில் தற்போது மின்வெட்டுகள் இல்லை. அ.தி.மு.க அரசால் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நாங்கள் நடத்தும் ஒவ்வொரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும், மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறோம். இது ஆடம்பர விழா என்று குறைகூறுகிறார்கள். இது ஆடம்பர விழா கிடையாது. மக்கள் நன்மைக்கான விழா. சென்னையில் இந்த விழா நடைபெறாமல் இருக்கச் சதி திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், அதை முறியடித்து சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க அரசு செயல்படாத அரசு என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், தமிழக அரசு பல துறைகளில் சாதனைகள் படைத்து விருது வாங்கி வருகிறது. செயல்படாத அரசாக இருந்தால் பல விருதுகளைப் பெற முடியுமா என எண்ணிப்பார்க்க வேண்டும். யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அ.தி.மு.க இருக்கிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும். அதேபோல் ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கி.மீ நீளமுள்ள மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும்.

கிராமங்களில் முதலமைச்சர் வீட்டுக் காய்கறி உற்பத்தித் திட்டம் தொடங்கப்படும். குடிசைகள் இல்லாத சென்னையை உருவாக்கி வருகிறோம். சென்னை அருகே உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ.417 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும்.

மேலும். ரூ.100 கோடி மதிப்பில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம் மற்றும் பள்ளிக்கரணையில் ரூ.31 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்படும்” எனக் கூறினார்.

 

நன்றி : ஆனந்த விகடன் 

spot_img

latest articles

explore more