புத்ராஜெயா, அக்.5-
பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் அசிஸ் ரஹீம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட சில மணி நேரங்களில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ( எஸ்.பி.ஆர்.எம்) அவரின் மகனை கைது செய்துள்ளது. வெள்ளிக்கிழமை எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்திருந்தபோது அசிஸ் ரஹீம்மின் மகன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கோடி கணக்கான ரிங்கிட் மதிப்புடைய அரசாங்கத் திட்டம் ஒன்றில் நடந்துள்ள ஊழல் முறைக்கேடுகள் தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திட்டத்தில் தமது தந்தையின் பினாமியாக அவர் செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குத்தகை நிறுவனம் வழங்கிய லஞ்சப் பணத்தை கொண்டு செல்லும் நபராக அசிஸ் ரஹிம்மின் மகன் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் செக்ஷன் 16-ன் கீழ் அசிஸ் ரஹீம்மின் மகன் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


