புத்ராஜெயா, அக்.5-
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் பி.கே.ஆர். கட்சியின் பொதுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்முக்காக , பிரச்சாரம் செய்ய வரும் அக்டோபர் 8 ஆம் தேதி தாம் உட்பட நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் போர்ட் டிக்சனில் களமிறகங்கவிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் போர்ட் டிக்சனில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
பிரதமராக பதவி வகிக்கும்போது, எப்போதும் இடைத் தேர்தல்களில் பிரச்சாரம் மேற்கொள்வதில்லை என்பதை டாக்டர் மகாதீர் ஒரு கொள்கையாக வைத்துள்ளார். எனினும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்வாரை ஆதாரித்து பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். தமக்கும் அன்வாருக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை என சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்கங்களிலும் வெளிவரும் தவறான தகவல்களை முறியடிக்க தாம் பிரச்சாரம் செய்யப் போவதாக மகாதீர் கூறினார்.
ஆக கடைசியாக 2009 ஆம் ஆண்டில் மகாதீர், புக்கிட் கந்தாங் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். அவர் அப்போது தேசிய முன்னணியை ஆதரித்தார் என்பது குறிப்பிடதக்கது. இதனிடையே அன்வாருக்காக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்வதாக பெர்சே வெளிப்படுத்தியிருக்கும் ஆதங்கம் குறித்தும் டாக்டர் மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அமைச்சர்களாக இருப்பவர்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை பெர்சே மறந்து விடக்கூடாது என டாக்டர் மகாதீர் நினைவுறுத்தினார். தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளுக்காக, அக்கட்சியில் உள்ளவர்கள் இலவசமாக பிரச்சாரம் செய்வதில் தவறேதும் இல்லை என மகாதீர் மேலும் தெரிவித்தார்.


