கோலாலம்பூர். அக்.5-
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் தொடர்பாக சிறந்த வழிமுறையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் நிர்வாகங்களில் ஊழல் நடவடிக்கை ஊடுருவாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய விரும்புவதாக டாக்டர் மகாதீர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளுக்கென்று நிதிவளம் இருக்க வேண்டும். ஆனால் அந்த நிதியை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை கூடிய நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்ற கூட்டத்தில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை என மகாதீர் மேலும் தெரிவித்தார்.
ஜெர்மனி நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் முறையை பின்பற்றுமாறு பரிந்துரை முன் வைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். அரசாங்கம் அந்த பரிந்துரையை அமல்படுத்தினால், நாட்டில் அதிகமானோர் அரசியல் கட்சிகளைத் தொடங்கி அரசாங்கத்திடம் நிதி கோருவதற்கு முயற்சி செய்யலாம் என மகாதீர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகளுக்கான நிதியுதவியில் ஊழல் அம்சங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த நுணுக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என டாக்டர் மகாதீர் கூறினார். அண்மையில் நிறுவனம் ஒன்று நம்பிக்கைக் கூட்டணி நிதிக்கு 10 கோடி ரிங்கிட்டை வழங்க முன் வந்ததாக பிரதமர் கூறினார்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றொரு நோக்கத்துக்காக 10 கோடி ரிங்கிட்டை வழங்க முன் வந்ததால், அரசாங்கம் அந்த நன்கொடையை நிராகரித்ததாக கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அரசியல் கட்சிகளுக்கான நிதியுதவி தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுவதாக டாக்டர் மகாதீர் மேலும் தெரிவித்தார்.


