மெல்போர்ன், அக்.16-
மல்டா நாட்டைச் சேர்ந்த கால்பந்து கிளப், ஒன்று உலகின் அதிவேக ஓட்டக்காரரான உசேன் போல்ட்டை தனது அணிக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஈ.எஸ்.பி.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உசேன் போல்ட், தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள சென்ட்ரல் கோஸ்ட் மரினேர்ஸ் அணியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் மல்டாவின் வலேட்டா எப்.சி கால்பந்து கிளப் உசேன் போல்ட்டை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் வழி டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற விருக்கும் சூப்பர் மல்டா கிண்ணப் போட்டியில் பல்சான் அணிக்கு எதிராக உசேன் போல்ட்டை களமிறக்க வலேட்டா எப்.சி திட்டமிட்டுள்ளது.
ஒரு வெற்றியாளர் என்ற முறையில் உசேன் போல்ட்டை வரவேற்பதில் தாங்கள் பெருமிதம் கொள்வதாக அந்த கிளப் தெரிவித்துள்ளது. உசேன் போல்ட்டைப் பெற வலேட்டா எப்.சி ஆர்வம் கொண்டிருப்பதை அவரின் முகவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மரினேர்ஸ் அணி தமக்கு ஒப்பந்தத்தை வழங்கும் என தாம் எதிர்பார்ப்பதாக உசேன் போல்ட் அவ்வபோது கூறி வருகிறார். 2018/19 ஆம் பருவத்துக்கான ஆஸ்திரேலியா லீக் போட்டி இவ்வாரம் தொடங்கவுள்ள வேளையில், உசேன் போல்ட்டுக்கு இன்னும் எந்த ஓர் ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.


