Homeமலேசியாஇயங்கலையில் முனைவர் இரா தண்டாயுதம் 22-வது சுழற்கிண்ணச் சொற்போர் போட்டி : பதிவு இறுதி நாள்...

இயங்கலையில் முனைவர் இரா தண்டாயுதம் 22-வது சுழற்கிண்ணச் சொற்போர் போட்டி : பதிவு இறுதி நாள் 31/8/2021

பெட்டாலிங் ஜெயா | 23/8/2021 :

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் தமிழ்ப் பேரவை ஏற்று நடத்தும் முனைவர் இரா.தண்டாயுதம் 22-வது சுழற்கிண்ணச் சொற்போர் போட்டி இவ்வாண்டும் புதிய பொலிவுடன் மலர்ந்துள்ளது. இந்நாட்டின் வரலாற்று மிக்க இச்சொற்போர் போட்டி, இவ்வாண்டு முதல் முறையாக இயங்கலையில் நடைபெறவுள்ளது.

மலேசியாவின் இந்திய மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களது பேச்சுத்திறனை வெளிக்கொணர்வதோடு அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இச்சொற்போர் போட்டி இவ்வாண்டும் சிறப்பான முறையில் மலர்ச்சி கண்டுள்ளது. இவ்வாண்டு 22-வது முறையாக முனைவர் இரா.தண்டாயுதம் சுழற்கிண்ணச் சொற்போர் போட்டி மாணவர் பிரிவு, பொதுப் பிரிவு என இரண்டு பிரிவுகளாகத் தேசிய அளவில் நடைபெறவுள்ளது.

மாணவர் பிரிவில் 13 முதல் 17 வயது வரை உள்ள இடைநிலைப் பள்ளி மாணவர்களும் பொதுப் பிரிவில் 18 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களும் கலந்து கொள்ளலாம்.

மலேசியாவில் உள்ள இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே இலைமறைக்காய் போல மறைந்திருக்கும் வாதத் திறமையைக் கண்டறிவது மட்டுமின்றி மாணவர்கள் மற்றும் பொது மக்களின் வாதத் திறமையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதுதான் முனைவர் இரா.தண்டாயுதம் 22-ஆவது சுழற்கிண்ணச் சொற்போர் போட்டியின் முதன்மை நோக்கமாகும்.

அதனையடுத்து, பேச்சாளர்களின் வாதத் திறனைப் போற்றுவதோடு அவர்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கும் வகையில் இச்சொற்போர் போட்டி இவ்வாண்டு சிறப்பான முறையில் மலர்ச்சி கண்டுள்ளது. முனைவர் இரா. தண்டாயுதம் 22-ஆவது சுழற்கிண்ணச் சொற்போர் போட்டியில் வெற்றி பெரும் முதல் நான்கு நிலை வெற்றியாளர்களுக்கும் சிறந்த பேச்சாளருக்கும் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும், முதல் நிலை வெற்றியாளர்களுக்குச் சுழற்கிண்ணமும் பங்கெடுத்த அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

“அரசியல் அமைப்பால் நான் ஒரு தமிழகத்துத் தமிழன்; ஆனால், உணர்வால் நான் ஒரு மலேசியத் தமிழன்”, என்று உரக்கப் பெருமையுடன் உலகத்திற்கு உரைத்தவர் முனைவர் இரா.தண்டாயுதம் அவர்கள். மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றித் தமிழுக்குத் தொண்டு செய்த முனைவர் இரா. தண்டாயுதம் அவர்களை மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி மலேசியத் தமிழ் மக்கள் அனைவருமே நன்கு அறிவர்.

நவீனத் தமிழ் இலக்கியம் இந்த நாட்டில் வளர்ச்சி காண்பதற்கு அவர் ஆற்றியுள்ள பணி மகத்தானது. இந்த நாட்டுக் கவிஞர்களின் கவிதைகள் சிலவற்றைத் திரட்டி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியீடு செய்த பெருமை ஐயா அவர்களையே சாரும். இப்படி, பலவாறு மலேசியத் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டாற்றிய இவரது சேவையை நினைவுக் கூறும் வகையில் ஆண்டு தோறும் தமிழ்ப் பேரவை அவரின் பெயரில் சுழற்கிண்ணச் சொற்போர் போட்டியினை நடத்தி வருகிறது.

ஆக, இப்போட்டியில் பங்கெடுக்க விரும்புபவர்கள் 31 ஆகஸ்ட் 2021-ஆம் நாளுக்குள் ‘Tamil Language Society of Universiti Malaya’ எனும் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்னியல் பாரத்தின் வழி தங்களைப் பதிந்து கொள்ள வேண்டும். மேலும், இப்போட்டி தொடர்பான மேல் விவரங்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

தமிழ்ச்செல்வன் நாகராஜன் : 011-36601186 (இயக்குநர்)
பிரேம்நாத் சுப்ரமணியம் சுரேஷ் : 016-7007915 (இயக்குநர்)

spot_img

latest articles

explore more