கோலாலம்பூர், மே 12-வாழ்வில் தான் பெற்ற தோல்விகளையும் அவமானங்களையும் வெற்றிப் படிகளாகக் கருதுவதாகக் கூறுகிறார் ‘தையல் நாயகி விருது பெற்ற கிருஷ்ணவேணி கனகரத்தினம் (50) .
இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தையல் தொழிலில் ஈடுபட்டு வருவதோடு இத்தொழிலை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
“அப்பா கொடுத்த ஊக்குவிப்பே இத் தொழிலில் நான் காலூன்றக் காரணம். 15 வயதில் இருந்து இதில் ஈடுபட்டு வருகிறேன்”.
“தவிர, என்னை இத்துறையில் மேம்படுத்திக் கொள்வதற்காக டிப்ளோமா மற்றும் டிகிரி கல்வி வரை பெற்றேன். இதன் வழி இப்போது பல பல டிசைன்களில் ஆடைகளைத் தைக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளேன்”.
“பினாங்கு, பேராக், ஜோகூர் என பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் என்னிடம் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டனர். இவர்களில் சிலர் இப்போது இந்தியாவில் தொழில் புரிகின்றனர்.இது எனக்கு பரிபூரண மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது”என்கிறார் தையல் தொழில் வழி தனது 4 பிள்ளைகளையும் பட்டதாரிகளாக்கிய பெருமைக்குரியவரான கிருஷ்ண வேணி.
தையல் தொழிலில் புரிந்த சாதனைக்காக கிருஷ்ணவேணி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அப்பால் இப்போது எஸ்பி சரவணன் வழங்கியிருக்கும் ‘தையல் நாயகி ‘விருது தனது தொழில் ஈடுபாட்டிற்கு மேலும் உற்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் இதற்காக அவருக்கு நன்றி பாராட்டுவதாகவும் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
இதனிடையே, சிங்கப்பூரில் இருந்து திருமணமாகி தலைநகர், செந்தூல் வந்த தான் தையல் துறையில் சிறந்து விளங்குவதற்கு சில பயிற்சிகளை மேற்கொண்டதாகக் கூறுகிறார் சகுந்தலா சின்னப்பன்(67).
“ஆரம்பத்தில் எனது அம்மா என்னை இத்துறையில் ஈடுபடுவதற்கு உற்சாகப்படுத்தினார்.அவர் தந்த ஊக்குவிப்பில் இத்தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். திருமணத்திற்குப் பின் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்”.
திருமணமாகி 1978 இல் தலைநகர் வந்தேன். பிள்ளைகள் பிறந்த பின்னர் அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டிய கடமை இருந்தது.
தொடர்ந்து 1992 ஆம் ஆண்டில் தையல் தொழில் மீது முழு கவனத்தைச் செலுத்தத் தொடங்கினேன். இதற்காக சில பயிற்சிகளை மேற்கொண்டேன்.
இந்தப் பயிற்சிகள் வழி என்னை இத்துறையில் நன்கு வளர்த்துக் கொண்டேன். இப்போது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதுப்புது டிசைன்களில் ரவிக்கை, பஞ்சாபி ஆடை உள்ளிட்ட பல வகையான ஆடைகளைத் தைத்துத் தருகிறேன்.
இதன் வழி நல்ல வருமானத்தையும் ஈட்டுகிறேன். இத்தொழில் எனக்கு மகிழ்ச்சியும், மனநிறைவையும் தருகிறது.
“இத்துறையில் நான் கொண்டிருக்கும் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு என்னை ‘தையல் நாயகி ‘விருது வழங்கி கௌரவித்த ஏற்பாட்டாளர்களுக்கு இதன் வழி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் “என்றார் கடந்த 51 வருடங்களாக இத்தொழிலில் மிகவும் துடிப்புடன் ஈடுபட்டு வரும் சகுந்தலா.


