போர்ட்டிக்சன், மே 19-அரசாங்கக் கொள்கைகள், திட்டங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு தெளிவாகவும் திறமையாகவும் எவ்விதத் தவறும் இன்றி பரவ, தமிழ் ஊடகத்தினர் சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சின் துணை செயலதிகாரி (தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு) மனோ வீரபத்திரன் வலியுறுத்தினார்.
‘தமிழ் ஊடக உள்ளடக்கம் உருவாக்கப் படைப்பாற்றல் பயிற்சி’ எனும் பயிற்சியை தகவல் தொடர்பு அமைச்சின் கீழ் இயங்கும் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு, தகவல் கல்வி நிறுவனம் (IPPTAR) போர்ட் டிக்சன் கிராண்ட் லேக்ஸிஸ் விடுதியில், கடந்த 14, 15, 16 ஆம் தேதிகளில் நடத்தியது. பயிற்சியின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், பயிற்சியில் பங்குபெற்றவர்கள் மீண்டும் இதுபோன்ற வாய்ப்புகள் வரும்பொழுது அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்தப் பயிற்சி தமிழ் ஊடகத்தினரை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட முதல் வகையான பயிற்சியாகும்.
இதில் பங்கேற்றவர்கள் மொபைல் ஜர்னலிசம் (MoJo) தொடர்பான கருவிகள், உத்திகளை கற்றுக்கொண்டு, தங்களது திறன்களை விரைவாகவும் விளக்கமாகவும் மேம்படுத்தவும் முடிந்தது என IPPTAR கல்வித் துறையின் நிர்வாகி எஸ். குமரன் தெரிவித்தார்.
IPPTAR பல்வேறு பயிற்சிகளை நடத்துகிறது. தமிழ் ஊடகவியலாளர்கள் அதன் அகப்பக்கங்களில் சென்று அதுகுறித்த தகவல்களை பெறும் அதே வேளையில் அதன் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் ஊடக மேம்பாட்டு திட்டங்களில் பங்கேற்று தங்களை மேலும் வளர்த்துக்கொள்ளலாம் என வலியுறுத்தினார்.
நாட்டில் இயங்கிவரும் தமிழ் ஊடகத்தைச் சார்ந்த 18 பேர் இந்த பயிற்சியில் பங்கு பெற்றனர்.
ஊடகத்துறையில் ஒரு புதிய சிந்தனைக் கோணத்தை ஏற்படுத்த, புதிய தொழில்நுட்ப பயன்பாடு, போட்டிகளுக்கிடையில் தனித்திறனுடன் மிளிர்வதற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும் என குமரன் நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டாம் நாள் நடைபெற்ற பயிற்சியை பெர்னாமா ஊடகத்தின் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ சிறப்பாக வழிநடத்தினார்.
செய்தி எழுதும் விதம், செய்தியாளர்கள் பின்பற்றக்கூடிய விதிமுறைகள், சட்டதிட்டங்கள், அரசாங்க தகவல்களை சிறப்பான முறையில் கொண்டு சேர்க்கும் விதங்கள் குறித்து அவர் பயிற்சிகள் அளித்தார்.
முதல் நாள் பயிற்சியில் கைத்தொலைபேசி மூலம் செய்திகளை சுலபமாக தயாரிக்கும் முறைகளை (MOJO) தகவல் இலாகாவின் அதிகாரி அபு ஹுபாய்ஸா பயிற்றுவித்தார். கைப்பேசியைக் கொண்டு உடனுக்குடன் செய்தி அனுப்பும் வழிமுறைகள் குறித்தும் அவர் தெளிவுற விளக்கினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக சசிதரன் லோகநாதன் நிகழ்ச்சியை செவ்வனே வழிநடத்தினார்.
இந்த மூன்று நாள் பயிற்சியில் அநேகன் சார்பில் அதன் செய்தியாளர் தர்வீன் கார்மேகம் கலந்து கொண்டார்.


