கோலாலம்பூர், மே 21-கட்டாய பணி ஓய்வுக்கான வயதை 60 வயதிலிருந்து 65 வயதாக உயர்த்துவது குறித்து அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் துறையின் சட்ட மற்றும் கழகச் சீர்த்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது தனிநபர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் , அவர்கள் இன்னும் சுறுசுறுப்பாகவும், உற்பத்தித் திறனுடனும், பணியாளர்களுக்கு பங்களிக்கக் கூடியவர்களாகவும் இருப்பதால் அது இழப்பாக மாறுகிறது.
இதனால் அரசாங்கம் இந்த வயது வரம்பை 65 வயதாக உயர்த்த பரிசீலனை செய்யலாம்.
சில அதிகாரிகள் இன்னும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் 60 வயதில் கட்டாய ஓய்வை அடைந்தனர்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆசியான் உறுப்பு நாடுகள் உட்பட பல நாடுகளில் சிலர் இன்னும் 70 வயது வரை பணியாற்றுகின்றனர் என்றார்.
நீதிபதிகள் 65 அல்லது 70 வயது வரை பதவியில் இருக்க அனுமதிக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.


