Homeஅரசியல்பிரதமர் பொறுப்பைக் கேடயமாக பயன்படுத்தக்கூடாது! - ஹம்சா

பிரதமர் பொறுப்பைக் கேடயமாக பயன்படுத்தக்கூடாது! – ஹம்சா

கோலாலம்பூர், மே, 30-
சட்டநடவடிக்கையிலிருந்து ஒரு நபரை விலக்களிப்பதற்கும் நீதி நடைமுறையைத் தவிர்ப்பதற்கும், பிரதமர் என்ற நிலையை ஒரு கேடயமாக பயன்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஸைனுடின் வலியுறுத்தினார்.

நாட்டின் தன்மானத்தை காப்பது கட்டாயமான ஒன்று. அதுவும், எல்லைகளற்ற நடப்பு உலகில், அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்துலக சமூகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

ஒரு தலைவரின் குறிப்பாக, பிரதமரின் தன்மானத்தை காப்பது மிக முக்கியம். அது நாட்டின் ஆற்றலைப் பறைச்சாற்றுகின்றது. அதனூடே, அரசியலைமைப்பு சட்டத்தையும் சட்ட இறையாண்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என டத்தோ ஸ்ரீ ஹம்சா கூறினார்.

பதவி, அந்தஸ்து பாராமல், அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள், ஒரு போதும், நீதி நடைமுறையை தவறாக பயன்படுத்தக்கூடாது. அது, நாட்டின் சட்டக் கழகத்தின் மீதும் தலைமைத்துவத்தின் மீதும் மக்களை
நம்பிக்கையிழக்கச் செய்திடும் என அவர் எச்சரித்தார்.

முன்னாள் உதவியாளர் முஹம்மட் யூசோஃப் ராவ்தர் தொடுத்திருக்கும் சிவில் வழக்கில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழக்கறிஞர் அசாதாரண விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றத்தில் இதற்குமுன்பு தாக்கல் செய்திருந்தார்.

அதில், அவ்வழக்கில் பிரதமர் விலக்கு பெரும் உரிமை உட்பட 8 கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, டத்தோ ஸ்ரீ ஹம்சா அவ்வாறு கருத்துரைத்தார்.

ஒவ்வொரு நபரும் தன்னை தற்காத்துக்கொள்ளவும் சட்டத்தின் வாயிலாக தனது பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக்கொள்ளவும் நீதிமன்றமே சிறந்த தளமாக உள்ளது.

அதில், உரிய நீதி வழங்கப்படாவிட்டால், இரட்டை நிலை பாகுபாடு உள்ளது என்ற தோற்றத்தை விதைக்கும். மக்கள் நம்பிக்கையை இழக்கும் வேளை, அந்நிய முதலீட்டாளர்களும் இந்நாட்டை குறிப்பிட்ட நபர்களின் சட்டம் வழிநடத்துவதாகவே கருதக்கூடுமென டத்தோ ஸ்ரீ ஹம்சா கூறினார்.

spot_img

latest articles

explore more