Homeஅரசியல்துன் டாய்ம் மனைவியின் சொத்துடமைகளை முடக்க அனுமதி!

துன் டாய்ம் மனைவியின் சொத்துடமைகளை முடக்க அனுமதி!

கோலாலம்பூர், ஜூன் 3-
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடினின் மனைவி தோ புவான் நைய்மா அப்துல் காலிட்டுக்கு சொந்தமான பல்வேறு சொத்துடமைகளை முடக்க, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அனுமதி வழங்கியது.

நைய்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான லண்டனிலுள்ள 3 ஆடம்பர வீடுகள் உட்பட மலேசிய மதிப்பில் 758 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 7 சொத்துடமைகள் முடக்கப்பட்டுள்ளதாக, பெரித்தா ஹரியான் இணையச் செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அது தவிர, நைய்மாவின் பொருளக கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு கள்ளப்பணப் பரிமாற்றம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல், சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து வருவாய் ஈட்டுதல் முதலானவற்றைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் துன் டாய்ம் மீதும் நைய்மா மீதும் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையின் தொடர்ச்சியாக, ஊழல் தடுப்பு ஆணையம் அந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

மறைந்த துன் டாய்முக்கும் நைய்மாவுக்கும் வெளிநாட்டில் சொத்துடமைகள் இருப்பதாக தமது தரப்பு நம்பினாலும் உத்தரவிட்டது போல அவ்விருவரும் அது குறித்த தகவலை அமலாக்கத் தரப்பிடம் வழங்கவில்லை என அவ்வாணையத்தின் தலைவர் தான் ஸ்ரீ அஸாம் பாக்கி இதற்குமுன்பு கூறியிருந்தார்.

அச்சொத்துகளை அவ்விருவரது குடும்ப உறுப்பினர்களோ அல்லது பினாமிகளோ கொண்டிருக்கக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்பு, துன் டாய்ம்க்கு சொந்தமான 2 பில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய சொத்துடமைகள் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more