பிரிக்ஃபீல்ட்ஸ், ஜூன் 11- இந்திராணி டான்ஸ் அகாடமி மாணவிகளின் சலங்கை பூஜை தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸ் கலாமண்டபத்தில் அண்மையில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்த சலங்கை பூஜையின் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட, மஜ்லிஸ் கெபுடாயாயான் டான் வாரிசான் நூசந்தாராவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன், இதற்குத் தலைமையேற்று அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தார்.
சமூகங்களை ஒன்றிணைத்து, பாரம்பரியத்தைக் காப்பதும் வளர்ப்பதுமான, பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடனங்கள் மூலம் மலேசியர்கள் பல்துறை பண்பாட்டைக் கொண்டாடி, கலை வெளிப்பாட்டைப் பராமரித்து, தேசிய அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் என ஶ்ரீ சுகுந்தன் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வை மிகச் சிறப்பாக வடிவமைத்து, பரதக்கலையின் பாரம்பரியத்தை கடந்த 22 ஆண்டுகளாக நிலைநிறுத்தி வருகிறார் இந்திராணி டான்ஸ் அகாடெமியின் இயக்குனரும் நடன ஆசிரியருமான டாக்டர் இந்திராணி சுகுமார்.
தெய்வீக முறையில் 18ஆவது முறையாக தமது நடன பள்ளியின் சலங்கை பூஜையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் என்று டத்தோ ஶ்ரீ சுகுந்தன் புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலாச்சார இயக்கங்களின் பொறுப்பாளர்கள், நடனக்கலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நடனமணிகளுக்கு ஊக்கமளித்தனர்.
சலங்கை பூஜை என்பது பாரம்பரிய இந்திய நாட்டியக் கலை உலகில், குறிப்பாக பரதநாட்டியத்தில், ஒரு புனிதமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது ஒரு மாணவி முதன்முறையாக தன் கால்களில் சலங்கை அணிந்து, மக்களின் முன்னிலையில் நடனம் செய்யத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது.
அதைவிட முக்கியமாக, இது ஒரு சாதனை நிகழ்வாகும். குருவை, கலை வடிவத்தை மற்றும் அதன் ஆதாரமான ஆன்மிக மரபுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு நிகழ்வாகும். இது பல ஆண்டுகளாக நீண்ட பயிற்சி, கற்றல், தியாகம் மற்றும் தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார் அவர்.
இந்நிகழ்வில் பத்து மாணவிகளுக்கு சலங்கை அணிவித்தார் குரு ஶ்ரீமதி டாக்டர் இந்திராணி.
புதிய சலங்கையைக் காலில் அணிந்த நடனமணிகள், ஆலய நடனம், தில்லானா மற்றும் மங்கள இசை பாங்கில் சிறந்த நடனங்களை வழங்கினர்.
இம்மாணவர்கள் மத்தியில் 41 வயதைக் கடந்த பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் குமாரி அருணா தேவி கிருஷ்ணன் மற்றும் திருமணமாகி 45 வயதைக் கடந்த திருமதி யோக செல்வி பாஸ்கரனும் இடம் பெற்றனர்.
தமது குருவால் கற்பிக்கப்பட்ட நடனக்கலையை, அரங்கத்தில் அமைந்துள்ள மேடையில் தங்கள் தனித்திறமையுடன் வழங்கி சமர்ப்பித்த நடனமணிகள், பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தனர்.
இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கும் முன்பு, பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிமுகப்படுத்திய மலேசியா மடானி கோட்பாடான மதிப்பு, பண்பாடு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பரிவு மிக்க சமுதாயத்தை உருவாக்கக் கூடிய ஒரு நிகழ்வாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
சமூகங்களை ஒன்றிணைத்து, பாரம்பரியத்தைக் காப்பதும் வளர்ப்பதுமான, பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடனங்கள் மூலம் மலேசியர்கள் பல்துறை பண்பாட்டைக் கொண்டாடி, கலை வெளிப்பாட்டைப் பராமரித்து, தேசிய அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் என ஶ்ரீ சுகுந்தன் வலியுறுத்தினார்.
இந்திராணி டான்ஸ் அகாடமியின் நிறுவனரும் நடன ஆசிரியருமான, குரு ஶ்ரீமதி இந்திராணி, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நம் பரதக்கலை பண்பாட்டுப் பயணத்தை நடத்திக் கொண்டிருப்பது பெருமைக்குரிய செயல்.
குரு ஶ்ரீமதி டாக்டர் இந்திராணியின் முயற்சியை இவர் வெகுவாகப் பாராட்டினார்.
அனைத்து நடனமணிகளுக்கும் பொன்னாடைகளை அணிவித்து மலர்ச்செண்டுகளை வழங்கி தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் ஶ்ரீ சுகுந்தன்.


