கோலாலம்பூர், ஜூன் 11-
விற்பனை மற்றும் சேவை வரி – எஸ்.எஸ்.டி.யின் வரி விதிப்பை பல்வேறு தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்கும் விரிவுபடுத்துவதைவிட, பொருள் மற்றும் சேவை வரி – ஜி.எஸ்.டி.யை அரசாங்கம் மீண்டும் அமல்படுத்துவது மேலானது என ம.சீ.ச. வலியுறுத்தியுள்ளது.
ஜூலை 1 முதல் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் பிரீமியம் பொருட்களுக்கு எஸ்.எஸ்.டி வரி விகிதம் 5 முதல் 10 சதவீதமாக மறுபரிசீலனை செய்யப்படும் என நேற்று இரண்டாவது நிதியமைச்சர் செனட்டர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் அறிவிப்பைத் தொடர்ந்து, ம.சீ.ச. உதவித் தலைவர் லாரன்ஸ் லோ அந்த வலியுறுத்தலை முன்வைத்தார்.
அரசாங்கத்தின் தொடர்ச்சியான எஸ்.எஸ்.டி. விரிவாக்க அணுகுமுறை, அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காமல், வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். ஆனால், முக்கிய பிரச்சினையான நாட்டின் பலவீனமான வரி அடித்தளத்தை தீர்க்காது.
புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட வரிகளை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக, நியாயமான, வெளிப்படையான மற்றும் திறமையான ஜி.எஸ்.டி வரி முறையை மறு பரிசீலனை செய்வது மிகவும் பொருத்தமாக இருக்குமென அவர் கூறினார்.
ஆப்பிள் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களாக வகைப்படுத்தப்பட்டு 5 சதவீத எஸ்.எஸ்.டி. விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு ரிம60,000க்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மழலையர், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கு 6 சதவீத வரி விதிக்கப்படும்.
எஸ்.எஸ்.டியின் புதிய விகிதங்களில் அடிப்படை சேவைகளுக்கு விலக்கு அளிப்பதாக வெளிப்படுத்தப்பட்டாலும், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் இது உண்மையில் இல்லை என்று லோ கூறினார்.
எடுத்துக்காட்டாக, கல்வி, நிதி பரிவர்த்தனைகள், அழகு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு போன்ற துறைகள் வரி விதிக்கப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன, ஆனால் இவை நகர்ப்புற மத்திய தர குடும்பங்களுக்கு முக்கியமானவை என்று அவர் கூறினார்.
மேலும், குடியிருப்பு அல்லாத வளாகங்களுக்கான வாடகை சேவைகள், அழகு சிகிச்சைகள், தனியார் கல்வி மற்றும் வெளிநாட்டவர்களுக்கான மருத்துவ சேவைகள் முதல் பார்வையில் அத்தியாவசியமற்றவையாக தோன்றலாம்.
ஆனால், இந்த சேவைகள் நகர்ப்புற மத்திய தர குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையிலும், சிறு வணிகங்களிலும் முக்கிய பங்கு வகிப்பதை சுட்டிக்காட்டிய லோ, இறுதியாக பயனீட்டாளர்களின் செலவுகள் அதிகரித்து, பணவீக்க சங்கிலியில் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் 2015-இல் அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி வரியை, 2018-இல் அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் தலைமையிலான முதல் பக்காத்தான் ஹாராப்பான் ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.


