புத்ரா ஜெயா, ஜூன் 18-
அடுத்த மாதம் அமல்படுத்தப்படவிருக்கும் விற்பனை வரி விகித மறுஆய்வு மற்றும் சேவை வரி வரம்பு விரிவாக்கம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
விற்பனை வரி விகித மறுஆய்வு மற்றும் சேவை வரி வரம்பு விரிவாக்கம் குறித்த பொது மக்களின் கவலையை அரசாங்கம் கருத்தில் கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் மக்கள் வரி குறித்து கவலை அடைவதை சுட்டிக் காட்டிய ஃபாஹ்மி இதற்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகச் சொன்னார்.
இந்த வரி விரிவாக்கம் மீது இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் விரைவில் விளக்கம் அளிப்பார் என்றும் ஃபாஹ்மி குறிப்பிட்டார்.


