கோலாலம்பூர், ஜூன் 18- கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் மேற்கொள்ளப்பட்ட குடிநுழைவு இலாகாவின் சோதனையில் போலி விசாக்களைத் தயாரித்து அந்நிய நாட்டவர்களுக்கு விநியோகித்து வந்த பாகிஸ்தானிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இரு வாரங்களாக அந்த நபரின் நடவடிக்கையை அணுக்கமாகக் கண்காணித்து வந்த பின்னர், அந்த நபரும் அவருக்கு உதவியாளர்களாகச் செயல்பட்ட உள்ளூரைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட மூவரைக் கைது செய்திருப்பதாக குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபருக்குப் பயண ஆவணங்களும் விசா அனுமதியும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
சட்டவிரோத அந்நியர்களுக்குப் போலி விசாக்களைத் தயாரித்து 100 லிருந்து 120 ரிங்கிட் வரை விற்று வந்ததாகச் சொல்லப்படுகிறது.
கைது செய்யப்பட்டோர் புத்ரா ஜெயா குடிநுழைவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.


