கோலாலம்பூர், ஜூன் 19-
மலேசிய பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்த அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார் .
இந்த வரி விதிப்பிற்கான தற்காலிக விலக்கு வரும் ஜூலை 8ஆம் தேதியோடுமுடிவடைகிறது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து தொடர் பேச்சுகளை நடத்துவதற்காக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் ஹஜிஸ் நேற்று வாஷிங்டன் சென்றதாகத் தெரிகிறது.
இந்தப் பேச்சுகளில் தற்போது முன்னேற்றம் காணப்படுவதாக டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தம்மிடம் தெரிவித்ததாக பிரதமர் சொன்னார்.
தங்களின் அமெரிக்க சந்திப்பின்போது டத்தோஸ்ரீ ஜஃப்ருலும் இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஜிசானும் மலேசியாவுக்கான நலன்களை மட்டுமல்லாது ஆசியான் நாடுகளுக்கான நலன்கள் பற்றியும் விவாதித்ததாக இங்கு நடைபெற்ற 38-ஆவது ஆசிய பசிபிக் வட்டமேசை சந்திப்பில் உரை நிகழ்த்தியபோது அன்வார் சுட்டிக் காட்டினார்.


