பேங்காக், ஜூலை 1-
தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இன்று தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கியது.
பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் விலகவேண்டும் என்று அந்நாட்டு செனட்டர்கள் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தாய்லாந்தின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்படும் வரை அவர் பிரதமர் பதவியை விட்டு விலகியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடனான தொலைபேசி உரையாடல் கசிவானதையடுத்து பேதொங்தார்ன் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார்.
அந்த உரையாடலில் தமது ராணுவ தளபதியை அவர் குறை கூறியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

