Homeஅரசியல்நீதித்துறையில் குறுக்கீடு; அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்! -எஸ்.பி.புனிதன்

நீதித்துறையில் குறுக்கீடு; அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்! -எஸ்.பி.புனிதன்

கோலாலம்பூர், ஜூலை 7-

மலேசியாவில் நீதித்துறையில் குறுக்கீடு செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், நமது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பொது நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றன.

பி.கே.ஆர். முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி உள்ளிட்ட ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எச்சரிக்கையை, வெறும் அரசியல் புகைச்சலாக கருதி புறக்கணிக்க முடியாது என மலேசிய இந்திய மக்கள் கட்சி – MIPP தலைவர் எஸ்.பி.புனிதன் தெரிவித்தார்.

அவ்விவகாரத்திற்கு, உடனடி மற்றும் தீவிரமான கவனத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். நீதித்துறையின் ஒருமைப்பாடு கேள்விக்குள்ளாகும்போது, நாட்டின் நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படை அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.

நீதித்துறை குறுக்கீடு குறித்து விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை தாம் பாராட்டுவதாக புனிதன் கூறினார்.

மூத்த நீதிபதிகளின் ஓய்வு மற்றும் நியமன நீட்டிப்புகளில் “இரட்டைத் தரநிலைகள்” குறித்து மக்கள் நீண்ட காலமாக சந்தேகம் கொண்டுள்ளனர். இவை நீதிமன்ற நடவடிக்கைகளை மந்தமாக்கி, நிறுவனங்களின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்று டத்தோ ஸ்ரீ ரஃபிஸி எச்சரித்துள்ளார்.

இந்த நெருக்கடியின் தீவிரத்தன்மை, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஸைனுடின் ஆகியோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரசியல் தலையீடுகளிலிருந்து நீதித்துறை விடுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்து, இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும், அமைப்பு சீர்திருத்தத்திற்கான அவசர தேவையையும் வலியுறுத்துகிறது.

பெரிக்காத்தான் நேஷ்னல் தொடக்கம் முதலே, இவ்விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இப்போது, பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே கவலைகளை எழுப்பியுள்ளனர். இது ஓர் அரசியல் கட்சியின் கருத்தாக மட்டும் பார்க்கப்பட முடியாது. இது ஒரு தேசிய பிரச்சினை.

இந்த பிரச்சினையில் பல்வேறு தரப்பினர் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.

சிவில் சமூகத்தினர், தொழில்முறை அமைப்புகள், பொது மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, அரசாங்கத்தை உறுதியான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துமாறு தாம் கேட்டுக்கொள்வதாக, புனிதன் கூறினார்.

அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவும் தாமதம் புரிவதற்குமான நேரம் இதுவல்ல. நீதித்துறையின் சுதந்திரம் ஜனநாயகத்தின் உயிர்நாடியாகும். நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உயர்த்துவதற்கும், நமது நாட்டை ஒருங்கிணைக்கும் மதிப்புகளை பாதுகாப்பதற்கும் MIPP கட்சி உறுதியான குரலாக இருக்கும் என புனிதன் உறுதியளித்தார்.

 

spot_img

latest articles

explore more