ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி (தேமு) பெற்ற மாபெரும் வெற்றி, மக்கள் மீண்டும் தேசிய முன்னணி மீது தங்களது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்திருப்பதற்கான தெளிவான சான்றாகும் என்று தேசிய முன்னணியின் உதவித் தலைவரும் மக்கள் முற்போக்கு கட்சியின் (பிபிபி) தலைவருமான டத்தோ டாக்டர் லோகா பாலமோகன் தெரிவித்துள்ளார்.
மலேசிய மக்கள் நல்லாட்சியையும், வெளிப்படையான, பொறுப்பான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தையும் விரும்புகின்றனர்.
அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தேசிய முன்னணி முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாது. மாறாக, மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, சிறந்த சேவை வழங்கலை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்திய மற்றும் சீன சமூகம் உட்பட அனைத்து மலேசியர்களும் தேசிய முன்னணி உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பின் பலனை அனுபவிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜொகூரில் கிடைத்த இந்த மாபெரும் வெற்றி, வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களிலும், அடுத்த பொதுத் தேர்தலிலும் நீல அலை ஒன்றை உருவாக்கும் என்பதில் தான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக டத்தோ டாக்டர் லோக பாலமோகன் மேலும் கூறினார்.
மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி), ஜொகூரில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு தனது முழு பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய தொடர்ந்து கடுமையாக உழைக்கும் என்றார்.
ஜொகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மட்டுமல்லாது மக்கள் தங்களது முழு ஆதரவை தேசிய முன்னணிக்கு வழங்கத் தயாராக இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றார் .


