Homeமலேசியாஆய்வு, புத்தாக்கங்கள் மக்களின் தேவைக்கேற்ற தீர்வுகளாக மாற வேண்டும்!

ஆய்வு, புத்தாக்கங்கள் மக்களின் தேவைக்கேற்ற தீர்வுகளாக மாற வேண்டும்!

@anegunnews

ஆய்வு, புத்தாக்கங்கள் மக்களின் தேவைக்கேற்ற தீர்வுகளாக மாற வேண்டும் – சாங் R&D must translate into solutions that improve lives, says Chang #anegunnews #anegunmedia

♬ original sound – AnegunNews – AnegunNews

கோலாலம்பூர்:

ஆய்வு மற்றும் புத்தாக்கங்கள் நோயாளிகளுக்குச் சிறந்த பலன்களை வழங்கக்கூடிய நடைமுறைத் தீர்வுகளாக மாற வேண்டும் என அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் டத்தோ சாங் லிஹ் காங் தெரிவித்தார்.

காயப் பராமரிப்பை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், காயத்துக்குச் சிகிச்சையளிப்பது மட்டுமின்றி, நோய்த் தடுப்பு, ஆரம்பகட்ட நடவடிக்கை, நோயறிதல், மருத்துவப் பராமரிப்பு, மறுவாழ்வு, நோயாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் நீண்டகால வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

எனவே, தரத்தை மேம்படுத்த புதிய அறிவை உருவாக்குவதுடன், ஆய்வு முடிவுகளை மருத்துவ நடைமுறைகளுக்குக் கொண்டு சென்று, மக்களின் உண்மையான தேவைகளுக்கேற்ப புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்குவது அவசியம் என அவர் கூறினார்.

2026-ஆம் ஆண்டு உலகக் காயப் பராமரிப்பு சங்கங்களின் ஒன்றிய மாநாட்டில் உரையாற்றியபோது சாங் இதனைத் தெரிவித்தார்.

ஆய்வு மற்றும் மேம்பாடு, வணிகமயமாக்கல், புத்தாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய சூழலியலை வலுப்படுத்த அமைச்சு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“ஆய்வுகள் ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் அல்லது அறிவியல் வெளியீடுகளுக்குள் மட்டுமே முடங்கிவிடக் கூடாது. அவை இறுதியில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தீர்வுகளாக மாற வேண்டும்.

“அத்துடன், நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் வேண்டும்,” என்றார்.

முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு, நீண்டகால நோய்கள் மற்றும் தனிநபர்களின் தேவைக்கேற்ப சிறந்த சிகிச்சைக்கான அதிகரித்து வரும் கோரிக்கை ஆகியவற்றை நாடு எதிர்கொண்டு வருவதால், சுகாதாரத் துறை அறிவியல் மற்றும் புத்தாக்கத்திற்கான முக்கிய துறையாக விளங்குவதாக சாங் கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு, உயிரித் தொழில்நுட்பம், மரபணுவியல், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட பொருட்கள் மற்றும் இலக்கவியல் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நாட்டின் திறன்களை அமைச்சு தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

சிறந்த நோயறிதல், நோயாளிகளைக் கண்காணித்தல் மற்றும் சிகிச்சைக்கு உதவும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றார்.

நாட்டின் திறன் மேம்படும்!

மலேசியாவின் மக்கள் தொகையைப் பிரதிபலிக்கும் மரபணுத் தரவுகளை உருவாக்குவதன் மூலம் மரபணு அறிவியல் மற்றும் துல்லியமான சுகாதாரத் துறையில் நாட்டின் திறனை வலுப்படுத்தும் MyGenom திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மரபணுவியல் துறையின் முன்னேற்றங்கள் நோய் ஏற்படும் அபாயங்களை நன்கு புரிந்துகொள்ள உதவுவதுடன், எதிர்காலத்தில் நோய்த் தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான மிகவும் துல்லியமான அணுகுமுறைகளை உருவாக்கவும் பங்களிக்கும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாங், உள்ளூர் புத்தாக்கத் தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவதற்கு நிதியுதவி மற்றும் ஆய்வு ஆதரவு உள்ளிட்ட உதவிகளை அமைச்சு தொடர்ந்து வழங்கி வருவதாகக் கூறினார்.

“ஆய்வு மற்றும் மேம்பாட்டின் மூலம் உருவாகும் அதிகமான தயாரிப்புகள் சந்தையைச் சென்றடைவதை உறுதி செய்வது எங்களது முன்னுரிமைகளில் ஒன்றாகும்,” என்றார்.

spot_img

latest articles

explore more