Homeகலை உலகம்ஆடை வடிவமைப்புத் துறையில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் REKA RONA; கலைஞர்களுக்கும் முக்கியப் பங்கு –...

ஆடை வடிவமைப்புத் துறையில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் REKA RONA; கலைஞர்களுக்கும் முக்கியப் பங்கு – பிகே நாயர்

கோலாலம்பூர்:

ஆடை வடிவமைப்புத் துறையில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இளைஞர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை வழங்கும் தளமாக REKA RONA 2026 அமையும் என மலேசிய ஆடை வடிவமைப்பு வர்த்தக மேம்பாட்டுச் சங்கம் (PEFEM) தலைவர் பிகே நாயர் தெரிவித்தார்.

ஆடை வடிவமைப்புத் துறை என்பது வடிவமைப்பாளர்கள் மற்றும் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மட்டுப்பட்டதல்ல என்றும், ஜவுளி, கைவினை, தயாரிப்பு, மாடல்கள், புகைப்படம், காணொளி, ஆடை அலங்காரம், ஒப்பனை, வர்த்தகப் பெயராக்கம், சந்தைப்படுத்தல், சில்லறை விற்பனை, மின்னணு வணிகம், ஊடகம் மற்றும் நிகழ்ச்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார்.

படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், அதனை பொருளாதார மதிப்பு, வருமானம் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளாக மாற்றுவதற்கான வழிகளையும் உருவாக்க வேண்டும் என்றார்.

REKA RONA மூலம் இளைஞர்கள், மாணவர்கள், புதிய ஆடை வடிவமைப்பாளர்கள், மாடல்கள், கைவினைக் கலைஞர்கள், தயாரிப்புக் குழுக்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கு நேரடி தொழில் அனுபவமும் வெளிப்பாடும் கிடைக்கும் என பிகே நாயர் தெரிவித்தார்.

அதேவேளை, ஆடை வடிவமைப்புத் துறையில் கலைஞர்களுக்கும் முக்கியப் பங்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கலைஞர்கள் தங்களது தளங்களைப் பயன்படுத்தி, வடிவமைப்பாளர்கள், மாடல்கள், ஆடை அலங்கார நிபுணர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட துறையினருக்கு வாய்ப்புகளை உருவாக்க உதவ வேண்டும் என்றார்.

தற்போது REKA RONA 2026 நேரடி வணிகச் சந்தைத் தளமாக உருவாக்கப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் சந்தை வாய்ப்புகள், சில்லறை விற்பனை, மின்னணு வணிகம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளுக்கான தளமாக விரிவுபடுத்த PEFEM விரும்புகிறது.

மேலும், மலேசியாவின் பாரம்பரிய ஜவுளி மரபுகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் நிகழ்வு கவனம் செலுத்துகிறது. பாத்தேக், சொங்கெட், லிமார், பூஆ கும்பு, தெனுன் பஹாங், கெரிங்காம், லினாங்கிட் மற்றும் தெலெபுக் உள்ளிட்டவை மலேசியாவின் வளமான ஜவுளிப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என அவர் தெரிவித்தார்.

REKA RONA 2026-இல் தேர்வு செய்யப்பட்ட ஐந்து படைப்புகள் ஆண்டு இறுதி வரை தேசிய ஜவுளி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் பங்கேற்பாளர்களுக்கு மேலும் ஒரு வெளிப்பாட்டு வாய்ப்பு கிடைக்கும் என பிகே நாயர் கூறினார்.

மலேசிய ஆடை வடிவமைப்புத் துறையையும் உள்ளூர் பாரம்பரியத்தையும் தொடர்ந்து முன்னெடுப்பதே தமது நோக்கம் என்றும், மலேசியா தொடர்பான அனைத்தும் தமக்கு முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்தார்.

REKA RONA 2026, அக்டோபர் 2ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள கிராஃப்டாங்கான் மலேசியாவில் நடைபெற்றது. இதில் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

spot_img

latest articles

explore more