Homeமலேசியாநாயைத் தாக்கிய ஆடவருக்கு வெ.8 ஆயிரம் அபராதம்!

நாயைத் தாக்கிய ஆடவருக்கு வெ.8 ஆயிரம் அபராதம்!

பெட்டாலிங் ஜெயா, ஜன.8-
புர்பி எனும் நாயைத் தலைக்கவசத்தால் தாக்கிய சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 8 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட நாயை அந்த வர்த்தகர் தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலானது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முதலில் மறுத்த யீ கோக் சியூ (வயது 57) எனும் அந்த வர்த்தகர், பின்னர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் இக்வான் முஹம்மட் நசீர் இன்று இந்த தண்டனையை வழங்கினார்.

மேலும், அபராதம் விதிக்கப்பட்ட நபர் (ஓ.கே.எஸ்.) என்ற அடிப்படையில் அவர் இந்த அபராதத்தைச் செலுத்த தவறினால் 8 மாதங்கள் சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டுமென நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, அந்த வர்த்தகர் அந்த அபராதத்தை செலுத்தினார்.

வெள்ளை சாக்லெட் நிறத்தில் இருந்த மோன்கிரேல் வகையைச் சேர்ந்த அந்த நாயை, அந்த வர்த்தகர் தலைக்கவசத்தால் கடுமையாக தாக்கியதால் அந்த நாய்க்கு வலியும் காயமும் ஏற்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்த குற்றத்தைக் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி இரவு மணி 8.49 அளவில் பூச்சோங், பண்டார் கின்ராராவிலுள்ள தாமான் மெலோடியில் இருக்கும் பாதுகாவலர் அறையில் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

1953ஆம் ஆண்டு விலங்குகள் சட்டத்தின் செக்ஷன் 44 (1)(ஏ) மற்றும் 2013ஆம் ஆண்டு விலங்குகள் சட்டத் திருத்தம் ஆகியவற்றின் கீழ் அந்த வர்த்தகர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச அபராதமாக 50 ஆயிரம் வெள்ளியும் அல்லது ஓராண்டு சிறையும் அல்லது அவ்விரு தண்டனைகளையும் வழங்க வகை செய்கின்றது.

spot_img

latest articles

explore more