லண்டன், ஜன.11 –
2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலாந்து லீக் கிண்ணம் ( காராபாவோ கிண்ணம் ) போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் செல்சி கோல் ஏதுமின்றி அர்செனலுடன் சமநிலைக் கண்டது. ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடந்த ஆட்டத்தில் செல்சி, ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தது.எனினும் செல்சியின் தாக்குதல் பகுதி அதிகமான கோல் போடும் வாய்ப்புகளை நழுவ விட்டதால், ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

செல்சி தாக்குதல் ஆட்டக்காரர்கள் 21 முறை, அர்செனல் கோல் முனையை நோக்கி தாக்குதல்களை தொடுத்தனர். அதேவேளையில் அர்செனல் எட்டு முறை மட்டுமே செல்சி கோல் காவலரை பரிசோதிக்கும் வகையில் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டிருந்தாலும் செல்சி வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது என நிர்வாகி அந்தோனியோ கொந்தே தெரிவித்துள்ளார்.
ஆட்டத்தை முழுமையாக ஆக்கிமித்திருந்தாலும் தாக்குதல் ஆட்டக்காரர்களின் பலவீனமான ஆட்டம் தங்களின் அணியை பாதித்துள்ளதாக அந்தோனியோ கொந்தே தெரிவித்தார். இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டம் ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில் செல்சி தனது ஆட்டத்தரத்தை மேம்படுத்த வேண்டும் என கொந்தே தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியில் முதல் முறையாக கேப்டன் பொறுப்புடன் களமிறங்கிய ஜேக் வில்ஷேர் காயம் காரணமாக 54 ஆவது நிமிடத்தில் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். மூன்று ஆட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அர்செனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர் இரண்டு முறையாக ஆட்டத்தை அரங்கில் உள்ள் ஊடகவியலாளர்களுடன் ஆட்டத்தை கண்டு களித்தார்.


