சென்னை, மார்ச் 9-
சென்னை கேகே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் வாசலில் மாணவி அஸ்வினியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தினார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தார். மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இன்று மதியம் கல்லூரி வாசலில் மர்ம நபர் ஒருவர் மாணவி அஸ்வினியை மறித்து பேசினார்.
இருவருக்குமான வாக்குவாதம் முற்றியதால் அந்த நபர் தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்வினி மீது சராமாரியாக குத்தினான். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மாணவி அஸ்வினி ரத்த வெள்ளத்தில் கிழே சாய்ந்தார்.
இந்த காட்சியை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் மாணவியை கொன்று விட்டு தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விரட்டிய இளைஞர் முதற்கட்ட விசாரணையில் மாணவியை குத்தியவன் பெயர் அழகேசன் என்று தெரியவந்துள்ளது. அஸ்வினியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளான். ஏற்கனவே மதுரவாயல் காவல்நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்துள்ளார்.
பட்டப்பகலிலே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீனாட்சி கல்லூரி வாசலில் பதற்றம் அதிகரித்துள்ளது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒருதலைக்காதலால் அஸ்வினியை அழகேசன் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


