Homeஅரசியல்SST விரிவாக்கத்தை ரத்து செய்க; அரசாங்கத்திற்கு பாஸ் ஆதரவுப் பேரவை கோரிக்கை

SST விரிவாக்கத்தை ரத்து செய்க; அரசாங்கத்திற்கு பாஸ் ஆதரவுப் பேரவை கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 18-

விற்பனை மற்றும் சேவை வரி – SST விரிவாக்கம் செய்யப்பட்டு, உணவு மற்றும் பானங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், இலக்கவியல் உள்ளிட்ட சேவைகளுக்கு விதிக்கப்படலாம் என்பது அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பின் வழி தெளிவாகிறது.

மக்கள் ஏற்கனவே அழுத்தங்களைச் சந்தித்துவரும் நிலையில், அரசாங்கத்தின் அந்நடவடிக்கை, மக்களின் செலவழிக்கக்கூடிய வருமானத்தை குறைத்து, நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால், அதற்கு பாஸ் ஆதரவுப் பேரவை DHPP எதிர்ப்பு தெரிவிப்பதாக, அதன் தலைவர்
பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் தெரிவித்தார்.

அனைத்து பின்னணிகளைக் கொண்ட மக்கள் பொருளாதார அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட போதிலும் பொருட்கள் விலைகள் குறையவில்லை.

டீசல் மானிய மறுசீரமைப்பால் சிறு வணிகங்கள், தளவாட மற்றும் போக்குவரத்து தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் மீட்சியுறச் செய்யப்படுகிறது என்று கூறினாலும், பணவீக்க விகிதம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது.

SST வரியை விரிவாக்கம் செய்வதில் அரசாங்கம் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை கருத்தில் கொள்ளவில்லை. இது பி40 பிரிவை மட்டுமல்ல, இப்போது நகர்ப்புற ஏழைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள எம்40 பிரிவினரையும் பாதிக்கிறது.

அரசாங்கத்தின், வருவாய் திரட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கும் மனப்பான்மையும், நிர்வாகத்தில் உள்ள கசிவுகள், வீண் செலவுகள், ஊழல்களை சரிசெய்யாமல் இருப்பதும் ஏமாற்றமளிக்கிறது. அரசாங்கம் பின்வருவனவற்றில் கவனம் செலுத்த வேண்டும்:

1. வீண் செலவுகளுக்கு வித்திடும் அமைச்சரவையின் அளவை குறைப்பது.
2. பொது நிதி கசிவுகளை குறைப்பது.
3. உற்பத்தித்திறன் இல்லாத அரசியல் நியமனங்களை ஒழிப்பது.

பொருளாதாரம் இன்னும் நிலையற்ற நிலையில் இருக்கும்போது, மக்களுக்கு கூடுதல் வரி விதிப்பது அல்லது உயர்த்துவது தார்மீகமற்ற மற்றும் அக்கறையற்ற செயலாகும்.

இது அரசாங்கத்தின் மிகவும் படைப்பாற்றல் மற்றும் நியாயமான தீர்வுகளை கண்டறிவதில் ஏற்பட்டுள்ள தோல்வி கண்டுள்ளதை காட்டுகிறது.

எனவே, தனது நிலைமையிலான DHPP பின்வருவனவற்றை வலியுறுத்துவதாக, பாலசுப்ரமணியம் கூறினார்.

1. SST விரிவாக்க திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
2. மக்களுக்கு முக்கியமான மானியங்களை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.
3. சமூக நீதி மற்றும் வளத்தில் நியாயமான பகிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும், இனம், மதம் பாராமல், மக்களை அடக்குவதோடு சுமையை ஏற்படுத்தும் கொள்கைகளை எதிர்க்கும் மக்களுடன் DHPP உறுதியாக நிற்கும் என பாலசுப்ரமணியம் திட்டவட்டமாக கூறினார்.

spot_img

latest articles

explore more