Homeஅரசியல்மடானி அரசாங்கம் கவிழ்ந்தால், ரஃபிஸி உட்பட பி.கே.ஆரின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களே பொறுப்பு! -ஹாசான் கரிம்

மடானி அரசாங்கம் கவிழ்ந்தால், ரஃபிஸி உட்பட பி.கே.ஆரின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களே பொறுப்பு! -ஹாசான் கரிம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-

நீதித்துறை நியமனங்கள் மற்றும் நீதித்துறையில் தலையீடு குறித்து விசாரிக்க, அரச விசாரணை ஆணையம் – RCI-யை அமைக்க வலியுறுத்தியுள்ள பி.கே.ஆர் கட்சியின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை, பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசன் கரிம் சாடினார்.

பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும் பி.கே.ஆரின் முன்னாள் துணைத்தலைவருமான டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி தலைமையிலான குழுவினர், அக்கோரிக்கையை வைப்பதற்கு முன்பு, அதன் அரசியல் விளைவுகளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்திருக்க வேண்டும்.

மேலும், இது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்துக்கு அழுத்தம் தரலாம் என கூறிய அவர், இவர்களின் செயல் உண்மையான சீர்திருத்த இலட்சியத்தால் உந்தப்பட்டதா அல்லது அரசியல் நலன்களுக்காகவா எனவும் கேள்வி எழுப்பினார்.

“இவர்களின் செயல் முற்போக்கானது, ஆனால் ஆபத்தானது. அரசாங்கம் கவிழ வேண்டுமா? இது பி.கே.ஆருக்குள் கிளர்ச்சி போன்றது,” என்று ஹாசன் கூறினார்.

நேற்று, ரஃபிஸி உள்ளிட்ட பி கே.ஆரின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை நியமனங்களில் தாமதம் ஏற்பட்டதால் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறி, அரச விசாரணை ஆணையத்தையும் நாடாளுமன்ற சிறப்புக் குழு விசாரணையையும் கோரினர்.

முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கந்தர் ஆகியோரின் பணி ஓய்வைச் சுட்டிக்காட்டி அவர்கள் அக்கோரிக்கைகளை விடுத்தனர்.

தற்போது, மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷிம் தலைமை நீதிபதி பதவியையும், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஸபாரியா யூசோப் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவியையும் தற்காலிகமாக நிர்வகிக்கின்றனர்.

இதனிடையே, பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள நெருக்கடி குறித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், நியமனங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடைபெறுவதாகவும் சட்டத்துறை அலுவலகம் இன்று பதிலளித்துள்ளது.

spot_img

latest articles

explore more