Homeஅரசியல்ஆளும் கட்சிக்கு ஆமாம் சாமி போடுபவர்கள் நாங்கள் அல்லர்!  -பேராசிரியர் இராமசாமி 

ஆளும் கட்சிக்கு ஆமாம் சாமி போடுபவர்கள் நாங்கள் அல்லர்!  -பேராசிரியர் இராமசாமி 

கோலாலம்பூர், நவ. 18-

நாட்டிலுள்ள இந்தியர்களின் உரிமைக்காகப் போராடுவதற்குப் புறப்பட்டுவிட்ட தாங்கள் ஆளும் அரசாங்கத்தின் அநீதியைத் தட்டிக் கேட்க ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்று உரிமை கட்சியின் இடைக்கால தலைவர் பேராசிரியர் இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார்.

இந்தியர்கள் இந்நாட்டில் ஐந்து அல்லது ஆறு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூக ரீதியில் இன்னும் நெருக்கடியில்தான் உள்ளனர்.

இவர்களுக்கு முட்டுக் கட்டையாக இருப்பது அடிப்படை உரிமைகள். இவற்றிக்காகப் போராடுவதற்காகவே உரிமை என்ற கட்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

“இக்கட்சிக்கான பதிவு இன்னும் கிடைக்கவில்லை. எங்கள் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். இதற்கு நீதிமன்றம் விரைவில் அங்கீகாரம் வழங்கும் என்று திடமாக நம்புகிறோம் “என்று தலைநகரில் பத்து தொகுதி உரிமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செல்வேந்திரன் கிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

“சீட்டு வேண்டும். பதவி வேண்டும் என்பதற்காக இக்கட்சியை நாங்கள் தொடங்கவில்லை. இந்தியர்களின் அடிப்படை உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் தலையாய இலக்கு, இலட்சியம் எல்லாம்”.

“நான், சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்ஷல் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இது. எங்கள் பாதை தெளிவாக உள்ளது”.

பெர்சத்து, பாஸ் கட்சிகளைக் கொண்ட பெரிக்காத்தான் நேஷனல் குடையின் கீழ் நாங்கள் இணையவிருக்கிறோம். ஆனால் , அவர்களுக்கு அடிமையாகப் போவதில்லை. நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இந்திய சமுதாயத்தை அவர்கள் மதிக்க வேண்டும் என்பதுதான் .

பல்லின கட்சி என்று இனியும் பொய்யுரைக்க வேண்டாம் என்று ஜசெகவைச் சாடிய பேராசிரியர், இந்தியர்களுக்குப் பாடுபடுவதற்காகத் தொடங்கப்பட்ட உரிமை கட்சி இச்சமூகத்தின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடும் என்று வலியுறுத்தினார்.

 

அன்வார், பிகேஆர், ஜசெகவை வசை பாடுவதுதான் தனது அன்றாட வேலை என்ற அவர் யாருக்கும் அஞ்சாமல் இந்தியர்களின் உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.

இதனிடையே, கடந்த 27 ஆண்டுகள் மக்கள் நீதி கட்சிக்காக ரத்தம் சிந்திய அளவுக்குப் பாடுபட்டு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம்தான் என டாக்டர் செல்வேந்திரன் தான் கடந்து வந்த கசப்பான  அரசியல் பயணத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

இதே போன்ற அனுபவமே அக்கட்சியில் தனக்கும் ஏற்பட்டதாக உரிமை கட்சி போராட்டத்தில் களம் இறங்கியிருக்கும் செகு சேகர் விவரித்தார்.

இதுவரை இந்தியர்களின் நலனுக்காகப் பினாங்கு மாநிலத்தில் போராடி வந்த தாங்கள் இனி உரிமை கட்சி வழி நாடு முழுமையும் போராட்டத்தைத் தொடரவிருப்பதாக சதீஸ் முனியாண்டி எழுச்சியுரை ஆற்றினார் .

முஸ்லிம் அல்லாதோர் என்று குறிப்பிடும்போது அது இந்தியர்களைத் தான் அதிகம் சுட்டிக் காட்டுகிறது. ஆகையால், இந்தச் சொல் தவிர்க்கப்பட வேண்டும். இதற்குப் பதிலாக இந்தியர்கள் என்றே குறிப்பிடலாம் என்றார் நிகழ்ச்சியில் பேசிய டேவிட் மார்ஷல்.

 

 

 

 

spot_img

latest articles

explore more