Homeஅரசியல்அடுத்த பொதுத்தேர்தலுக்குத் தயாராகுங்கள்; கட்சி இயந்திரத்தை வலுப்படுத்துங்கள் - சரவாக் பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு டத்தோஶ்ரீ ரமணன்...

அடுத்த பொதுத்தேர்தலுக்குத் தயாராகுங்கள்; கட்சி இயந்திரத்தை வலுப்படுத்துங்கள் – சரவாக் பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு டத்தோஶ்ரீ ரமணன் அழைப்பு

கூச்சிங், மார்ச் 14-

வரவிருக்கும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சரவாக் மக்கள் நீதிக் கட்சி (KEADILAN) உறுப்பினர்கள் தங்களது கட்சி இயந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சரவாக்கிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரமணன், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 13, 2026) நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமரும் பி.கே.ஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் இணைந்து சரவாக் பி.கே.ஆர் மாநாட்டில் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“சரவாக் பி.கே.ஆர் தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்களின் உற்சாகமான வரவேற்பு எங்களை நெகிழச் செய்தது. இதுதான் பி.கே.ஆரின் ஒருமித்த குடும்பம். இதுவே நமது கட்சி, இதுவே நமது இல்லம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சரவாக் பி.கே.ஆரின் சிறப்பான வரவேற்புக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ரமணன், அடுத்த தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், “கட்சி இயந்திரம் முன்கூட்டியே முடுக்கிவிடப்பட வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், அடிமட்ட உறுப்பினர்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்புகளைச் சீரமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்.

தேர்தலில் சிறந்த வெற்றியைப் பதிவு செய்ய கட்சி முழு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் மிக முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகள் (Reformasi) மக்களின் நலனுக்காகத் தொய்வின்றிச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, அடிமட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அன்வார் இப்ராகிமுக்குப் பின்னால் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மற்றும் சரவாக் பி.கே.ஆர் தலைவர்களுடன் இணைந்து ரமணன் நோன்பு துறப்பு (Iftar) நிகழ்விலும் பங்கேற்றார்.

இந்தச் சந்திப்பு தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியதுடன், பி.கே.ஆர் தொடர்ந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கமாகத் திகழ்வதை உறுதிப்படுத்தும் மன உறுதியையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more