Homeமலேசியாதிருக்குர்ஆனை அவமதித்த விக்னேஸ்வரன் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம்!

திருக்குர்ஆனை அவமதித்த விக்னேஸ்வரன் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம்!

குவாந்தான்:

திருக்குர்ஆனை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பகாங் சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக (UMPSA) மாணவர் ஒருவர், பல்கலைக்கழகத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடந்த மார்ச் 9-ஆம் தேதி நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட 21 வயது மாணவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக UMPSA துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் யாதிமா அலியா தெரிவித்தார்.

“பல்கலைக்கழகத்தின் 2024-ஆம் ஆண்டு (மாணவர் ஒழுக்கம்) விதிகளின் கீழ், அந்த மாணவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் உடனடியாக பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலோ அல்லது பொது அமைதிக்குத் தடையாக இருக்கும் வகையிலோ மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் செயல்படக் கூடாது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு பாடமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, மார்ச் 3-ஆம் தேதி, கே.எஸ். விக்னேஸ்வரன் என்ற அந்த மாணவர் மீது குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் திருக்குர்ஆனை அவமதித்தது மற்றும் சமூக ஊடகங்களில் ஆபாசமான/வெறுக்கத்தக்க கருத்துகளைப் பகிர்ந்தது என இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இருப்பினும், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more