மெட்ரிட், ஜன.11 –
ஸ்பெயின் கோப்பா டெல் ரே கிண்ண கால்பந்துப் போட்டியில் ரியல் மெட்ரிட் காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 2 – 2 என்ற கோல்களில் நுமேன்சியாவுடன் சமநிலைக் கண்டது.எனினும் 5 – 2 என்ற ஒட்டு மொத்த கோல்களில் ரியல் மெட்ரிட் காலிறுதி சுற்றில் தனது இடத்தை உறுதிச் செய்தது.

முதல் ஆட்டத்தில் 3 – 0 என்ற கோல்களில் வெற்றி பெற்றிருந்ததால், ரியல் மெட்ரிட் நிர்வாகி சினிடின் சிடான் பல முன்னணி ஆட்டக்காரர்களுக்கு ஓய்வு வழங்கியிருந்தார். 11 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட்டின் முதல் கோலை லுக்காஸ் வாஸ்குவேஸ் போட்டார்.எனினும் 44 ஆவது நிமிடத்தில் குலேர்மோ போட்ட கோலின் மூலம் நுமேன்சியா ஆட்டத்தை சமப்படுத்தியது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் மீண்டும் லுக்காஸ் வாஸ்குவேஸ் போட்ட கோலினால் ரியல் மெட்ரிட் 2 – 1 என்ற கோல்களில் முன்னணிக்கு சென்றது. இருப்பினும் 89 ஆவது நிமிடத்தில் குலேர்மோ போட்ட கோலால், நுமேன்சியா தோல்வியில் இருந்து தப்பியது.


