கோலாலம்பூர், மார்ச் 7
ஒரே மலேசியா உதவித்தொகை (பிரிம்) குறைந்த வருமானத்தைப் பெறும் தரப்பினருக்கு வழங்கப்படும் பரிசாகும். மாறாக, அது உமி அல்லது லஞ்சம் இல்லை என அரசாங்கம் இன்று வலியுறுத்தியது. இது குறித்து முதலாவது துணை நிதியமைச்சர் டத்தோ ஒத்மான் அசிஸ் கூறுகையில், பிரிம் தொகையானது அரசாங்கம் தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவக்கூடிய பரிசு என தெரிவித்தார்.
நான் புரிந்துக்கொண்டப்படி உமி கோழிக்கு மட்டும்தான். ஆகையால், பிரிம் தொகையை கோழி, மாடுகளுடன் ஒப்பிடக்கூடாது என மக்களவையில் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். முன்னராக மெர்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் லத்திப் அஹ்மாட், பிரிம் தொகை எதற்காக வழங்கப்படுகின்றது? அது அரசாங்கத்தின் பரிசா? என கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளிக்கையில் டத்தோ ஒத்மான் அசிஸ் இந்த பதிலை வழங்கினார்.
இதற்கு முன்பு எதிர்கட்சிகள் பிரிம் தொகை வழங்கப்படுவதை உமி என வர்ணித்த நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அதனை திட்டவட்டமாக மறுத்தார். பிரிம் தொகை ஒரு வகை லஞ்சம் என கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்த டத்தோ ஒத்மான் அசிஸ், அதனை பெறுபவர்கள் அதற்கு பிரதிபலனாக எந்த உதவிகளையும் வழங்கவில்லை என்பதால் அது லஞ்சமாகாது.
வருங்கால தலைமுறையினர் சிரமப்படுவதைத் தவிர்ப்பதற்கு பி40 தரப்பினருக்கு உதவக்கூடிய திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. அதனால், இந்த பிரிம் உதவித் தொகை தற்காலிகமானதாகும். பிரிம் தவிர்த்து அரசாங்கம் பல்வேறு உதவிகளையும் அவர்களுக்கு வழங்கி வருவதாக டத்தோ ஒத்மான் அசிஸ் கூறினார்.


