கோலாலம்பூர், மார்ச் 7-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு குறைந்தது 21 நாட்கள் வழங்கப்பட வேண்டுமென பி.கே.ஆர். தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பி.கே.ஆரின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறுகையில், வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் மக்களுடன் நெருங்குவதற்கு இந்த கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வாக்காளர்கள் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளனர். அதனால், தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசம் குறைவாக வழங்கப்படுவதில் நியாயம் இல்லை என மக்களவையில் பேசிய போது வான் அசிஸா கூறினார்.
பொதுத்தேர்தல் காலக்கட்டம் தொடர்பான விவகாரம் 44யைத் தொட்டு அவர் பேசினார். பொதுத்தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்கும் வரையில் 60 நாட்கள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த பிரிவில் இது கூறப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசத்தை நிர்ணயிப்பதில் அதாவது வேட்புமனு தாக்கல் முதல் வாக்களிக்கும் நாள் வரையில் குறைவான கால அவகாசத்தை வழங்குவதில் அர்த்தம் இல்லை என டத்தோஸ்ரீ வான் அசிஸா வான் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
கடந்த 40 வருடங்களாக பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார கால அவகாசம் குறைந்துக்கொண்டே வருகின்றது. 1969இல் 35 நாட்களும் 1974, 1978, 1982 ஆகிய ஆண்டுகளில் இரண்டு வாரங்களாக குறைக்கப்பட்டது. கடந்த 1999ஆம் ஆண்டு ஆகக் குறைவாக 8 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் 2013ஆம் ஆண்டு 15 நாட்கள் வழங்கப்பட்டது.


