கோலாலம்பூர், ஜுன் 14-
இந்நாட்டில் இந்திய உணவகங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காண வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அரசாங்கம் மீண்டும் அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களைத் தங்கள் உணவகங்களில் விரைவில் பணியில் அமர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று இச்சங்கத்தின் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி என்ற சுரேஷ் கேட்டுக்கொண்டார்.
உணவு மற்றும் பானங்கள் துறைக்குப் போதுமான பணியாளர்கள் இல்லாததால் இத்துறை மிகுந்த அழுத்தத்தையும் நெருக்கடியையும் எதிர்நோக்கி வருவதாக சுரேஷ் குறிப்பிட்டார்.
“மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான உணவகங்களின் பிரதிநிதிகளுடன் நான் சந்திப்பு நடத்தினேன்”.
உணவகத் துறையில் தொடர்ந்து நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளதை இவ்வேளையில் வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன் என்றார் அவர்.
உணவகங்களில் போதுமான தொழிலாளர்கள் குறிப்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லாதது உணவகங்களின் சேவைத் தரத்தை உண்மையிலேயே பாதித்துள்ளது .
அதோடு, உணவகங்கள் தங்களின் செலவுகளைச் சமாளிக்க தினமும் போராடி வருகின்றன.
இது வியாபார நிலைத்தன்மையை மட்டுமல்ல, சிறந்த உணவுக்குரிய இடமாக விளங்கும் மலேசிய உணவகங்களின் தோற்றத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது என்றார்.
மலேசியாவிற்கு வருகை தரும் 2026 ஆம் ஆண்டு நெருங்கிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மலேசிய உணவகங்களின் தோற்றம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
தூய்மை, செயல்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றுக்கு பயிற்சி பெற்ற மற்றும் போதுமான மனித வள தேவையை கடைசி நிமிடத்தில் திரட்ட இயலாது.
நாங்கள் தொழிலாளர்களை மட்டும் கோரவில்லை. உணவகங்களில் வாடிக்கையாளர்களின் விருந்தோம்பல் முறைப்படி நடைபெறுவதை உறுதி செய்வதற்கு குறிப்பாக, சுகாதார தரநிலைகள், கலாச்சார உணர்வு மற்றும் சேவைத் தரம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு இந்த அனுமதியை இப்போதே கோருகிறோம்.
அவ்வாறு வழங்கினால் மட்டுமே அவர்களுக்கு போதுமான பயிற்சியை அளித்து, அடுத்த ஆண்டு, மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டுக்கு முன்னதாகவே உணவகங்களில் போதுமான ஆள்பலம் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
இதன் அடிப்படையில் தங்கள் உணவகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்வதற்கு அரசாங்கம் உடனடியாக அனுமதி தர வேண்டும் என்று சுரேஷ் வலியுறுத்தினார்.


