பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-
2017ஆம் ஆண்டு பாஸ்டர் ரேய்மண்ட் கோ என்பவர் பெட்டாலிங் ஜெயாவில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, பட்டப் பகலில் ஒரு கருப்பு நிறக் காரில் வந்த சிலர், அவரைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது வரை கோ எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரின் சமயப் பிரசாரங்களில் வெறுப்படைந்த அதிகார வர்க்கத்தின் சிலரால் அவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அப்போது பரவலான சந்தேகம் எழுந்தது.
அவர் காணாமல் போனதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டுமென பாஸ்டர் கோவின் மனைவி சுசானா லியூ அரசின் மீது வழக்கைத் தொடுத்தார். அவ்வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அதில் சாட்சியமளித்த விசாரணை அதிகாரியான அமாட் மர்சுக்கி, அந்த வழக்கிற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் அதனை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் பாஸ்டரைக் கடத்தியதில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் டாக்சி ஓட்டுநர் லாம் சாங் நாமின் மீதான வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
-பொன் முனியாண்டி


