Homeசமூகம்சிறுநீரக நோயாளிகளின் மேம்பாட்டிற்காக வெ. 6லட்சம் வசூல்!  மெடிகேர் அறவாரியத்தின் உன்னத முயற்சி 

சிறுநீரக நோயாளிகளின் மேம்பாட்டிற்காக வெ. 6லட்சம் வசூல்!  மெடிகேர் அறவாரியத்தின் உன்னத முயற்சி 

கோலாலம்பூர், ஜூலை 25-

நாடு முழுவதும் மோசமாகி வரும் சிறுநீரக மற்றும் இருதய நோய் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியாக மெடிகேர் அறவாரியம் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு அண்மையில் ஏற்பாடு செய்தது.

தலைநகரில் பிரசித்தி பெற்ற தங்கும் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் மொத்தம் 6 லட்சம் வெள்ளி வசூல் செய்யப்பட்டது.

இந்த விருந்து நிகழ்ச்சியை மெடிகேர் அறவாரியத்தின் அறங்காவலரான நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஷ்ரிஸ் இப்னி அல்மார்ஹூம் துவாங்கு முனாவிர் மற்றும் அவரின் துணைவியார் துங்கு அம்புவான் பெசார் துங்கு அய்ஷா ரொஹானி அல்மார்ஹூம் தெங்கு பெசார் மாமுட் இருவரும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமதுவும் கலந்து கொண்டார்.

வறுமை நிலை காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மெடிகேர் அறவாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அனா ராஜசேகரன் கூறினார்.

ஊட்டச்சத்து இன்மை, போதிய சுகாதார பாதுகாப்பு இன்மை, நோய் பற்றிய விழிப்புணர்வு இன்மை போன்றவை நாட்டில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

“வறுமை காரணமாக  பலரால் வழக்கமான சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் இறுதி கட்டத்தில்தான் நோயைப் பற்றி இவர்கள் தெரிந்து கொள்ள நேரிடுகிறது .

இந்தக் கட்டத்தில் சிகிச்சைக்கான தேர்வுகள் வரையறுக்கப்படுகின்றன. இதனால் அவ்வளவு பயனும் கிடைக்காது. நோய் கடுமையாகி அதிகமானோரை மரணத்திற்கும் இட்டுச் செல்கிறது.

“இத்தகைய சூழலைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. இதற்காக சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் நோயைத் தொடக்க கட்டத்திலேயே அடையாளம் காணுதல் போன்ற நடவடிக்கைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் வாயிலாகவே நீரிழிவு நோயின் பாதிப்பைக் குறைப்பதோடு எதிர்காலத்தில் மலேசியர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் வழி வகுக்கும் என்றார்.

“கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோரைப் பராமரித்து அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதே எங்களின் பிரதான நோக்கம்” என்று அவர் வலியுறுத்தினார்.

வசதி குறைந்தோருக்குத் தரமான சுகாதார சேவையை வழங்குவதே மெடிகேர் சமூக அறவாரியத்தின் தலையாய நோக்கம்.

இதன் அடிப்படையில் பொது மக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடை வாயிலாக டைலசிஸ் சிகிச்சை, இருதய சுகாதார சோதனை மற்றும் இலவச மருத்துவ சோதனைகளை இவ்வாரியம் மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில் நாடு முழுமையும் 11 டைலசிஸ் மையங்கள், ஓர் இருதய நோய் கண்டுபிடிப்பு மையம் மற்றும் 2 இலவச கிளினிக்குகளைக் கொண்டுள்ளது.

இவற்றின் வழி நாடு முழுவதும் இதுவரை 32,000 திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளதாக அறியப்படுகிறது.

 

 

 

 

spot_img

latest articles

explore more